வெள்ளி, 29 அக்டோபர், 2010

ஐ.நா சபை பிரிட்டன் மற்றும் இலங்கை தொடர்பில் வேறுபட்ட கொள்கைகளை கடைப்பிடிப்பதை ஏற்கமுடியாது-அமைச்சர் கெஹெலிய..!

அமைச்சர் கெஹெலிய- ஐக்கிய நாடுகள் சபையானது பிரிட்டன் மற்றும் எமது நாடு தொடர்பில் இரு வேறுபட்ட கொள்கைகளை கடைப்பிடிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார். எமது நாட்டின் நற்பெயரை கட்டியெழுப்புவதற்காக வெளிநாட்டுக் கம்பனிகளுக்கு பணம் வழங்க வேண்டிய தேவை இல்லையென்றும் அவர் தெரிவித்துள்ளார். அரச தகவல் திணைக்களத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் உரையாற்றும்போதே அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல இதனைத் தெரிவித்துள்ளார். பிரிட்டனின் சனல் 4 தொலைக்காட்சி எமது நாட்டுக்கு எதிராக காட்சிகளை ஒளிபரப்பியது. இது பொய்யானது என்றும் உண்மைத் தன்மையை நிரூபிக்க வேண்டுமென்றும் சவால் விடுத்தோம். ஆனால் அவர்களால் உண்மைத் தன்மையை நிரூபிக்க முடியாமல் போனது. அக் கட்சிகளுக்கு எதிராக அன்று நாம் சவால் விடுத்ததன் காரணமாகவே எமக்கு எதிராக தொடர்ந்து காண்பிக்கப்படவிருந்த இவ்வாறான காட்சிகளை சனல் 4 கைவிட்டது. இதன்மூலம் எமக்கு எதிரான பொய்ப்பிரசாரம் முறியடிக்கப்பட்டது. எனவே ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கம் நிலையான கொள்கையை கடைப்பிடித்து வருகிறது. நேர்மை, உண்மைத் தன்மை எம்மிடம் உள்ளது. எனவே வெளிநாட்டுக் கம்பனிகளுக்கு பணம்கொடுத்து நாட்டின் நற்பெயரை பாதுகாக்க அவசியம் இல்லை. அதேவேளை நாட்டின் நற்பெயருக்கு எதிராக வெளிநாடுகளில் செயற்பாடுகளை மேற்கொள்வதை தடுக்கவும் அரசாங்கம் தயாராகவே இருக்கின்றது. பல்கலைக்கழகங்களில் ஒழுக்கத்தை நிலைநாட்டுவதற்கு கடுமையான நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுக்கும். ஒரு சிறு குழுவினர் பல்கலைக்கழகங்களில் குழப்பத்தை ஏற்படுத்தி வருகின்றனர். இவர்களிடம் மாணவர்களை இரையாக்க இடமளிக்க முடியாது. மாணவர்கள் தாக்கப்பட்டால் பொலிஸில் முறைப்பாடு செய்யலாம். அம் முறைப்பாடுகள் ஏற்றுக்கொள்ளப்பட இல்லையென்றால் நீதிமன்றத்தில் மனித உரிமை ஆணைக்குழுவில் முறையிடலாம். அமைச்சரொருவர் இத் தாக்குதலை நடத்தினார் என்ற குற்றச்சாட்டை ஏற்றுக்கொள்ள முடியாது. அதனை நிராகரிக்கின்றேன். ஆதாரங்கள் இல்லாமல் குற்றச்சாட்டுக்களை முன்வைக்கலாகாது.அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் அடாவடித்தனங்கள் வெளிப்படுத்தப்படுவதில்லை. ஐ.நா.வின் இரட்டை வேடம், பிரிட்டிஷ் இராணுவம் ஆப்கானிஸ்தானில் சிவிலியன்கள் மீது தாக்குதல் நடத்தி கொலை செய்யப்பட்ட செய்திகள் தொடர்பில் மௌனம் காக்கும் ஐ.நா. சபை எமது நாடு தொடர்பில் வேறு கொள்கையை கடைபிடிக்கின்றது. இதனை ஏற்றுக் கொள்ள முடியாது. இவ்வாறான இரட்டை வேடம் ஏன் என்பது புரியவில்லை என்று தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக