திங்கள், 27 செப்டம்பர், 2010

பதவிக்காலம் முடிவதற்குள் பாராளுமன்றத்தை கலைத்து ஐ.தே.க ஆட்சியை கைபற்றும்- ரணில்..!!

இன்றைய அரசாங்கத்தின் பதவிக் காலம் ஆறு வருடங்கள் நீடிப்பதற்கு அனுமதிக்க மாட்டோம். கூடிய விரைவில் பாராளுமன்றத்தைக் கலைத்து ஐக்கிய தேசியக் கட்சியை ஆட்சிப் பீடமேற்றுவதுடன் சிறைப்படுத்தப்பட்டுள்ள முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவை விடுதலை செய்வோம் என்று எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். சமாதான ஒப்பந்தம் மேற்கொண்ட என்னை தேசத்துரோகியாக வர்ணித்தவர்கள் இன்று பயங்கரவாதத்தை இல்லாதொழித்து நாட்டை மீட்ட சரத் பொன்சேகாவை சிறையில் அடைத்திருப்பது தான் தேசப்பற்றா? என்று கேட்க விரும்புகிறேன். என்னைத் தூற்றிய எந்தவொரு சிங்கள அமைப்பாவது பொன்சேகாவுக்கு இழைக்கப்பட்ட அநீதியை கண்டித்துள்ளதா? அல்லது சிங்கள ஊடகங்கள் தான் விமர்சித்துள்ளனவா? என்றும் அவர் கேள்வியெழுப்பினார்.ஐக்கிய தேசியக் கட்சியின் களனி பிரதேச அமைப்பாளர் பெவன் பெரேரா ஏற்பாடு செய்திருந்த இளைஞர் அணிக் கூட்டம் அவரது இல்லத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.இதில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க மேற்கண்டவாறு தெரிவித்தார். இதன்போது ரவி கருணாநாயக்க, ருவான் விஜேவர்த்தன ஆகிய எம்.பி. க்களும் மாகாண சபை மற்றும் மாநகர சபை உறுப்பினர்களும் கலந்து கொண்டிருந்தனர்.எதிர்க்கட்சித் தலைவர் இங்கு தொடர்ந்தும் உரையாற்றுகையில்,இந்நாட்டுக்கு சுதந்திரத்தைப் பெற்றுக் கொடுத்தவரும் பயங்கரவாதத்தை அழித்தொழித்தவருமான சரத் பொன்சேகா எம்.பி. யை இன்றைய அரசாங்கம் மிக மோசமான முறையில் பழிவாங்க அவரை சிறையில் தள்ளியிருக்கின்றது.அவருக்கு எதிரான முதலாவது இராணுவ நீதிமன்றத்தினால் வழங்கப்பட்ட தீர்ப்பின் பிரகாரம் அவரது பதவிகள், பதக்கங்கள் பறிக்கப்பட்டு ஓய்வூதியமும் இரத்துச் செய்யப்பட்டு இறுதியில் அவர் இராணுவ சேவையில் பதவி வகிக்காதவர் என்றும் அறிவிக்கப்பட்டது.அப்படியானால் இராணுவ சேவையில் இல்லாத சிவிலியன்களில் ஒருவரான சரத் பொன்சேகாவுக்கு எதிராக எவ்வாறு இரண்டாவது இராணுவ நீதிமன்றம் அமைக்க முடியும்? சிவிலியன் ஒருவரை எவ்வாறு இராணுவ நீதிமன்றத்தில் நிறுத்த முடியும் என்று கேட்க விரும்புகிறேன். அவருக்கு வழங்கப்பட்டுள்ள 3 வருட சிறைத் தண்டனையானது இராணுவ ஒழுக்கத்தைப் பாதுகாப்பதற்கான நீதிமன்றத்திலேயே வழங்கப்பட்டுள்ளது. மாறாக அந்தத் தீர்ப்பு அரசியலமைப்பின் கீழ் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ள சட்ட ரீதியான நீதிமன்றத்திலிருந்து வழங்கப்படவில்லை என்பதையும் இங்கு கூறி வைக்க விரும்புகிறேன். இரண்டாவது இராணுவ நீதிமன்றத்தினூடாக முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா எம்.பி. யை அரசாங்கம் இழிவுபடுத்தியுள்ளது மட்டுமல்லாது அவருக்கு பாரிய துரோகமிழைத்துள்ளது.சமாதான உடன்படிக்கை மேற்கொண்ட என்னை தேசத்துரோகி என்று இந்த நாடே கூறித் தூற்றியது. பல சிங்கள அமைப்புக்கள் எனக்கெதிராக உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் போர்க்கொடி தூக்கின. அவமதிப்பான சொற்பிரயோகங்களை வெளிப்படுத்தின. ஆனால் இன்று சரத் பொன்சேகாவின் நிலை என்ன என்பதை அந்த அமைப்புக்கள் அறிந்துள்ளனவா?தேசப்பற்று குறித்து பேசிய ஜாதிக ஹெல உறுமய எங்கே இருக்கின்றது. ஊடகங்கள் வாய் திறந்துள்ளனவா? சரத் பொன்சேகா தொடர்பிலான விடயங்களை தமிழ் மொழியிலான இணையத்தளங்கள் செய்தி வெளியிடும் அளவுக்கு கூட சிங்கள ஊடகங்கள் அக்கறைகாட்டவில்லை. ஆனாலும் நாள்தோறும் எனக்கு சேறு பூசும் விடயங்களை மாத்திரம் சரியாக செய்து வருகின்றன.சரத் பொன்சேகா மக்களின் ஆதரவுடன் பாராளுமன்றத்துக்கு தெரிவானவராவார். அவருக்கு அளிக்கப்பட்டுள்ள தீர்ப்பினையடுத்து அவரது அனைத்து சிறப்புரிமைகளும் பறிக்கப்பட்டுள்ளன. இதற்கு உடந்தையான இரண்டாவது இராணுவ நீதிமன்றத்தின் நீதிபதிகளை பாராளுமன்ற சிறப்புரிமைக் குழுவின் முன்னிலையில் ஆஜர்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.அரசாங்கத்தின் இன்றைய சர்வாதிகாரப் போக்கினை உடன் தடுத்து நிறுத்த வேண்டிய தேவை எழுந்துள்ளது. இதனை மேலும் அனுமதிக்க முடியாது. தங்க மகன் என்றும் பயங்கரவாதத்தை வென்ற யுத்த வெற்றியாளன் என்றெல்லாம் கூறிய அரசாங்கம் தான் இன்று அவரை சிறைக்குள் தள்ளியுள்ளது. எதிர்க்கட்சி என்ற வகையில் எமக்கென்று பொறுப்புக்கள் இருக்கின்றன. ஜனநாயகத்துக்கு விரோதமான பயணத்தை நிறுத்தியாக வேண்டும்.எனவே முதலில் நாம் கட்சிக்குள் ஐக்கியத்தை ஏற்படுத்துவோம். அடுத்ததாக இன்றைய அரசாங்கத்தின் ஆறு வருட பதவிக் காலத்தை இடையிலேயே முறியடித்து வெகு விரைவில் பாராளுமன்றத்தைக் கலைப்பதற்கு நடவடிக்கை எடுப்போம். அது மட்டுமல்லாது மக்களின் பேரபிமானத்துடன் ஆட்சியை அமைத்து சரத் பொன்சேகாவை சிறையிலிருந்து விடுவிப்போம்.அரசாங்கத்தின் சர்வாதிகாரத்துக்கு எதிராகவும் அதேநேரம் சரத் பொன்சேகா எம்.பி. யை விடுதலை செய்து கொள்வதற்குமான போராட்டம் அக்டோபர் மாதம் மூன்றாம் திகதி ஆரம்பமாகின்றது. அன்றயை தினம் பூகொடை பௌத்த மத்தியஸ்தான விஹாரையில் பிரித் நிகழ்வுடன் ஆரம்பமாகும் என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக