சனி, 18 செப்டம்பர், 2010

சர்வதேசக் கடற்பரப்பில் இலங்கை மீனவர்கள் தொழில் செய்யும் வகையில் கடற்றொழில் சட்டத்தில் திருத்தம் கொண்டுவரப்படவுள்ளது..!!

சர்வதேசக் கடற்பரப்பில் இலங்கை மீனவர்கள் தொழில் செய்யும் வகையில் கடற்றொழில் சட்டத்தில் திருத்தம் கொண்டுவரப்படவுள்ளது. இதற்கான பணிப்புரைகளையும், வழிகாட்டல்களையும் அமைச்சர் ராஜித சேனாரத்ன கடற்றொழில் நீரியல் வள திணைக்கள அதிகாரிகளுக்கு வழங்கியுள்ளார். இதன்மூலம் சர்வதேச கடற்பரப்பில் மீன்பிடிக்கச் சென்று இலங்கை மீனவர்கள் முகம்கொடுக்க நேரும் சட்ட ரீதியான நெருக்கடிகள் மற்றும் கைதுகளுக்கு தீர்வுகாண முடியும் என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். இலங்கையானது சகல சர்வதேச இணக்கப்பாடுகளிலும் கையொப்பமிட்டுள்ளபோதும் அதற்கிணங்க கடற்றொழில்களை மேற்கொள்வதற்கு முடியாதுள்ளது. இதனை கருத்திற்கொண்டு இது தொடர்பான தேசிய சட்டத்தில் திருத்தம் கொண்டுவர தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி, கடற்றொழில் நீரியல்வள அபிவிருத்தி, பாதுகாப்பு, முகாமைத்துவம் ஆகியவற்றை முறைப்படுத்தும் வகையிலும் சர்வதேச பிரிவுகள் மற்றும் இணக்கப் பாடுகளை நடைமுறைப்படுத்தும் வகையில் தற்போதுள்ள சட்டமூலத்திலே திருத்தம் செய்யப்படவுள்ளது. இதன்கீழ் கடற்றொழில் முகாமைத்துவப் பிரதேசங்கள் தொடர்பில் புதிய உத்தரவுகளைப் பிறப்பித்தல் தற்போதுள்ள சட்டமூலத்திற்கிணங்க அதிகாரமுள்ள அலுவலர்களுக்கு சர்வதேச கடற்பரப்பில் செயற்படும் அதிகாரங்களை வழங்கல், மீன்பிடி பிரதேசங்களை பாதுகாத்தல் உள்ளிட்ட பல விடயங்கள் திருத்தத்திற்கு உட்படுத்தப்படவுள்ளன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக