திங்கள், 21 ஜூன், 2010

உலகம் முழுவதும் வாழும் தமிழர்களின் ஒன்றுபட்ட நிலைக்கு வலுச்சேர்க்கும் வகையில் அமைய வேண்டும் என்பதே எமது அவா-கருணாநிதி..!

உலகத்தமிழ் செம்மொழி மாநாடு நடத்துபவர்களுக்கு ஈழமக்களுக்கான நீதியை பெற்றுத்தரும் பொறுப்பும் உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ள கருத்துக்கு தமிழக முதலமைச்சர் கருணாநிதி பதிலளித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, கோவையில் நடைபெறும் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டுக்கு வாழ்த்து வழங்கி- அந்த வாழ்த்தினூடே ஈழத் தமிழ்இனம் படுகின்ற இன்னல்களைச் சுட்டிக்காட்டி- அம்மக்களுக்கான நீதியைப் பெற்றுக்கொடுக்கும் பொறுப்பு -இச்செம்மொழி மாநாட்டினை நடத்துபவர்களுக்கு உண்டு என நம்புகிறோம் என்ற நம்பிக்கையையும் தெரிவித்து வெளியிட்டுள்ள அறிக்கையைக் காணும் வாய்ப்பைப் பெற்றேன். தாய்மொழியாம் தமிழ்மொழியின் எதிர்கால வளர்ச்சிக்காக நடத்தப்படவிருக்கும் இச்செம்மொழி மாநாட்டுக்கு எம் ஆதரவு உண்டு; இந்த மாநாடு தமிழ் மொழியின் வளர்ச்சிக்கு வழிகோலும் என்பதுடன் உலகம் முழுவதும் வாழும் தமிழர்களின் ஒன்றுபட்ட நிலைக்கு வலு சேர்க்கும் வகையில் அமைய வேண்டும் என்பதே எமது அவா என்றும் சுட்டிக்காட்டப்பட்டிருக்கிறது. அந்த அறிக்கையில் எந்த எதிர்பார்ப்பும், குறிக்கோளும் ஒளி விடுகிறதோ அவற்றைக் காணவேண்டும், கண்டுகளிக்க வேண்டும் என்ற ஆவலில் இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ள அமைப்பின் கருத்துகளில் எள்ளளவு வேறுபாடும் எமக்கில்லை என்பதை தெளிவுபடுத்த விரும்புகிறேன். இலங்கையில் நடந்த அவலத்தை அருகில் இருந்த தமிழர்களால் தடுக்க முடியவில்லை என்ற வேதனை நமக்கு உண்டு என்று அந்த அறிக்கையில் குறிப்பிட்டிருப்பது தான் தேவையற்ற விவாதத்துக்கு இடமளித்துவிடுமோ என்று அஞ்சுகிறேன். சிங்கள இராணுவத்தால் அப்பாவித் தமிழர்கள் கொல்லப்படுகிறார்கள் என்று தமிழகம் முழுதும் கண்டனக் குரல்கள் எழுந்தபோது, அவர்கள் யாரும் அப்பாவி மக்கள் அல்ல என்று கூறியதோடு, அவர்கள் சாகத் தான் வேண்டுமென்று சாபமிட்டவர்கள் யாரோடு கூடிக் குலாவினார்கள், இன்னமும் குலவிக் கொண்டிருக்கிறார்கள் என்பதை அறிக்கை வெளியிட்ட அந்த அமைப்பு ஒருக்கணம் எண்ணிப் பார்த்தால் உண்மைகள் ஆயிரம், ஒவ்வொன்றாக எதிர் நின்று சதி செய்த சண்டாளர்கள் யார் என்பதற்கு சாட்சியங்கள் கூறும். இந்நேரத்தில் மேலும் அதை விளக்க விரும்பவில்லை.உண்மை எப்போதும் உறங்கி விடாது. ஒருகாலத்தில் உதறிக்கொண்டு எழுந்து பேசத்தான் போகிறது. இதற்கிடையே எனக்குள்ள மகிழ்ச்சியெல்லாம், இங்கே சிலர் பாரதத்து காந்தாரி போலப் பதறித் துடித்து- ராமாயணத்து கூனி போல பட்டாபிஷேகத்தையே தடுத்துநிறுத்த பகிரங்கமாகவே அறிக்கை விட்டுக் கொண்டிருக்கும்போது, இதோ தமிழர்கள் நாங்கள்; எங்கிருந்தாலும், எப்படியிருந்தாலும் எம் தாய் மொழியாம் தமிழ்மொழியின் எதிர்கால வளர்ச்சிக்காக நடத்தப்பட விருக்கும் செம்மொழி மாநாட்டிற்கு எம் ஆதரவு என்றும் உண்டு. என்று அறிக்கை வெளியிட்டு-தமிழ் மொழியின் வளர்ச்சிக்கும் -எம் இனத்தின் ஒற்றுமைக்கும் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு உறுதுணையாக இருக்கும் என நம்புகிறோம், வாழ்த்துகிறோம் என்று உளம் திறந்து அறிக்கை ஒன்றினை வெளியிட்டிருப்பது கண்டு மகிழ்ச்சியடைவதோடு அவர்களைப் பாராட்டுவதும் கடமை எனக் கருதுகிறேன். என்று கருணாநிதி அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக