சனி, 22 மே, 2010
இலங்கையில் போர்க் குற்றங்கள் இழைக்கப்பட்டிருப்பதற்கான சாத்தியப்பாடு தொடர்பான புதிய ஆதாரம்..!!
இலங்கையில் போர்க் குற்றங்கள் இழைக்கப்பட்டிருப்பதற்கான சாத்தியப்பாடு தொடர்பான புதிய ஆதாரம் தன்னிடம் இருப்பதாக மனித உரிமைகளை கண்காணிக்கும் சர்வதேச அமைப்பான மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது. இலங்கையின் விமானப் படையைச் சேர்ந்த ஒருவரால் முன்னரங்க நிலைகளில் எடுக்கப்பட்ட 200ற்கும் அதிகமான புகைப்படங்களை தான் பரிசீலித்துள்ளதாக நியூயோர்க்கைத் தளமாகக் கொண்டியங்கும் மனித உரிமைகள் கண்காணிப்பகம் நேற்று தெரிவித்துள்ளது. சாட்சிகளைக் கொண்டதாகக் காணப்படும் புகைப்படங்களில் புலிகளின் அரசியல் பிரிவைச் சேர்ந்த ஒருவர் பாதுகாப்புப் படையினரால் பிடிக்கப்பட்டிருந்ததையும் பின்னர் தலையில் காயத்துடன் இறந்து காணப்பட்டதையும் காண்பிப்பதாக அமைந்துள்ளது. சிறையிலிருக்கும்போது நீதி விசாரணையின் பிரகாரம் அந்த இளைஞருக்கு மரணதண்டனை வழங்கப்பட்டது என்ற தீர்மானத்திற்கு மனித உரிமைகள் கண்காணிப்பகம் வரமுடியாது. முழுமையான விசாரணை தேவையென்பதை கிடைத்துள்ள ஆதாரம் சுட்டிநிற்கிறது என்று அந்த அமைப்பு கூறியுள்ளது. படையினரும் புலிகளும் மேற்கொண்டதாகக் கூறப்படும் போர்க்கால துஷ்பிரயோகங்கள் தொடர்பான புதிய ஆதாரம் தொடர்பாக சுயாதீனமான சர்வதேச விசாரணை தேவைப்படுவதாக மனித உரிமைகள் கண்காணிப்பகம் வலியுறுத்தியுள்ளது. யுத்தத்தின் இறுதிக்கட்டத்தின்போது இரு தரப்பினராலும் மேற்கொள்ளப்பட்ட அடாவடித்தனங்களின் சாட்சியங்கள் தொடர்பான பதிவுகளையும் புகைப்பட ஆதாரங்களையும் மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் ஆராய்ச்சிப்பிரிவு சேகரித்திருப்பதாக அவ்வமைப்பு தெரிவித்துள்ளது. 2009 மே23 ல் போர்ச் சட்டவிதிகள் மீறப்பட்ட குற்றச்சாட்டுகள் தொடர்பாக அரசாங்கம் விசாரணை நடத்துமென ஐ.நா. செயலாளர் நாயகத்துக்கு ஜனாதிபதி உறுதியளித்திருந்தார். ஒருவருடம் கழிந்தும் அது தொடர்பாக விசாரணை நடத்துவதற்குத் தேவையான நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லையென மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் ஆசியாவுக்கான பதில் பணிப்பாளர் எலெய்ன் பியஸன் கூறியுள்ளார். துஷ்பிரயோகங்கள் தொடர்பான புதிய ஆதாரமானது இலங்கையானது இவற்றை மூடிமறைப்பதற்கு ஐ.நா. அனுமதிக்கக்கூடாது என்பதை வெளிப்படுத்துவதாக அவர் மேலும் கூறியுள்ளார். மோதலில் சம்பந்தப்பட்ட இருதரப்பினராலும் போர்க் காலத்தில் மேற்கொள்ளப்பட்ட துஷ்பிரயோக குற்றச்சாட்டுகளை விசாரணை செய்வதற்கு சர்வதேச விசாரணையொன்றை ஏற்படுத்துமாறு ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூனை மனித உரிமைகள் கண்காணிப்பகம் கோரியுள்ளது. பான் கீ மூனின் செயற்பாடில்லாத தன்மையானது துஷ்பிரயோகங்களை மேற்கொள்வோர் இலகுவான முறையில் அர்த்தமற்ற ஆணைக்குழுக்கள் தொடர்பாக அறிவிப்பதற்கும் உண்மையான, நீதிக்காக மேற்கொள்ளப்படும் சகல முயற்சிகளையும் தடுப்பதற்கு உரத்து குரலெழுப்புவதற்குமான சமிக்ஞையை விடுக்கின்றது என்று தெரிவித்திருக்கும் பியஸன், இலங்கையில் பதிலளிக்கும் கடப்பாட்டை உறுதிப்படுத்துவதற்கான ஒரேவழி சுயாதீன சர்வதேச விசாரணையை ஏற்படுத்துவது மட்டுமே என்று கூறியுள்ளார்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக