வியாழன், 13 மே, 2010

வடக்கு சட்டத்தரணிகள் பிரதம நீதியரசர் சந்திப்பு..!!

வடக்கு சட்டத்தரணிகள் பிரதம நீதியரசர் அசோக டி சில்வாவை சந்தித்து பேச்சுவார்த்தை நடாத்தத் தீர்மானித்துள்ளனர். சாவகச்சேரி நீதவானுக்கு விடுக்கப்பட்ட மிரட்டலைத் தொடர்ந்து கடந்த இரண்டு வாரங்களாக வடக்கு சட்டத்தரணிகள் பணிப் புறக்கணிப்பு போராட்டமொன்றில் ஈடுபட்டு வருகின்றனர். யாழ்ப்பாணம், வவுனியா, மன்னார், முல்லைத்தீவு மற்றும் சாவகச்சேரியைச் சேர்ந்த சட்டத்தரணிகள் இன்றையதினம் பிரதம நீதியரசரைச் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர். நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு அழுத்தங்கள் பிரயோகிக்கப்படக் கூடாது எனவும் உரிய பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் எனவும் பிரதம நீதியரசரிடம் உத்தரவாதம் பெற்றுக்கொள்ளும் நோக்கில் இந்த சந்திப்பு நிகழவுள்ளது. தனிப்பட்ட காரணங்களுக்காக தாம் போராட்டத்தை முன்னெடுக்கவில்லை எனவும், நீதிமன்றத்தின் சுயாதீனத்தன்மையை உறுதிப்படுத்தும் நோக்கில் போராட்டம் முன்னெடுக்கப்படுவதாகவும் யாழ் சட்டத்தரணிகள் சங்கத் தலைவி சாந்தா அபிமானசிங்கம் தெரிவித்துள்ளார். பிரதம நீதியரசருடனான சந்திப்பினைத் தொடர்ந்து போராட்டத்தை நீடிப்பதா அல்லது கைவிடுவதா என்பது குறித்து தீர்மானிக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார். எந்தவொரு அரசியல் கட்சியோ அல்லது தனிப்பட்ட நபர்களையோ கைதுசெய்ய வேண்டுமென தாம் கோரவில்லை னஎ அவர் சுட்டிக்காட்டியுள்ளார். சாவகச்சேரி நீதவானுக்கு அச்சுறுத்தல் விடுத்த குற்றச்சாட்டின்பேரில் ஈ.பி.டி.பி. அரசியல் பிரமுகர் ஒருவர் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக