வெள்ளி, 9 ஏப்ரல், 2010

இந்தோனேசியாவின் மெராக் துறைமுகத்தில் படகு ஒன்றில் கடந்த பல மாதங்களாக தங்கியிருக்கும் இலங்கையை சேர்ந்த அகதிகள், கரையிறங்குவதற்கு சம்மதித்துள்ளனர்..!!

தம்மை இலங்கைக்கு திருப்பி அனுப்பமாட்டோம் என்று இந்தோனேசிய அதிகாரிகள் வழங்கிய உறுதிமொழியின் அடிப்படையிலேயே தாம் கரையிறங்கச் சம்மதித்ததாக அந்தப் படகில் இருக்கின்ற சுமார் 200 இலங்கை தமிழ் அகதிகளின் சார்பில் பேசவல்ல குமார் என்பவர் தமிழோசையிடம் கூறினார்.
ஐ.ஓ.எம் எனப்படுகின்ற சர்வதேச குடியேறிகளுக்கான அமைப்பு மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகளுக்கான அமைப்பு ஆகியவற்றின் அதிகாரிகள் இந்த விவகாரம் தொடர்பாக தம்மை வந்து சந்தித்து விவாதித்ததாகவும் குமார் கூறினார்.
மெராக் துறைமுகத்தில் அகதிகள் தங்கியிருக்கும் படகுஇனிமேலும் அந்தப் பகுதியில் படகில் அகதிகள் தங்கியிருப்பதை அனுமதிக்க முடியாது என்று மெராக் துறைமுகம் அமைந்துள்ள இந்தோனேசிய மாகாணத்துக்கான ஆளுனர் கூறியதன் அடிப்படையிலேயே இந்தோனேசிய அதிகாரிகள் தம்முடம் இந்த உடன்பாட்டுக்கு வந்ததாகவும் குமார் குறிப்பிட்டார்.
தாம் கரையிறங்கும் பட்சத்தில், 24 மணி நேரத்தில் தம்மை ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகளுக்கான அமைப்பிடம் கையளிக்க இந்தோனேசிய அதிகாரிகள் உடன்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
தமது படகில் பல குழந்தைகளும், பெண்களும் இருப்பதாகவும், பல மாதங்களாக போதிய வசதிகள் இன்றி அதில் தங்கியிருப்பதால், அவர்களில் பலர் சுகயீனம் அடைந்திருப்பதாகவும் குமார் குறிப்பிட்டார். அத்துடன் தமது படகில் இருந்த 25 வயதான ஜேக்கப் என்னும் இளைஞர் போதிய மருத்துவ வசதிகள் இல்லாத காரணத்தினால் இறக்க நேரிட்டதாகவும் அவர் கூறினார்.
இன்னும் 5 தினங்களுக்குள் தம்மை கரையிறக்கும் நடவடிக்கைகளை அதிகாரிகள் மேற்கொள்ளவுள்ளதாகவும் குமார் கூறினார்.
இலங்கையைச் சேர்ந்த இந்த தமிழ் அகதிகள் ஆஸ்ரேலியாவில் தஞ்சம் கோரும் நோக்கில், படகில் செல்கையில், இந்தோனேசிய படையினரால் தடுக்கப்பட்ட நிலையிலேயே மெராக் துறைமுகத்தில் பல மாதங்களாக படகில் தங்கியிருந்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக