புதன், 7 ஏப்ரல், 2010

எந்தவித அச்சமுமின்றி பொதுமக்கள் நேரகாலத்துடன் வாக்களிக்கச் செல்லவும்-பொலிஸ் மா அதிபர் மஹிந்த பாலசூரிய..!

எந்தவிதமான அச்சமுமின்றி பொதுமக்கள் நேரகாலத்துடன் வாக்களிக்கச் செல்லுமாறு பொலிஸ் மா அதிபர் மஹிந்த பாலசூரிய வேண்டுகோள் விடுத்துள்ளார். பொதுத்தேர்தலை முன்னிட்டு திட்டமிட்டபடி உச்சகட்ட பாதுகாப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர் தேர்தலின்போதும் அதன்பின்னரும் ஏற்படக்கூடிய எந்த ஒரு நிலைமைகளையும் சமாளிக்க பொலிஸாரும், பாதுகாப்புப் படையினரும் தயார் நிலையில் இருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். பொதுத் தேர்தலுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பாக ஊடகங்களுக்கு விளக்கமளிக்கும் விசேட செய்தியாளர் மாநாடு நேற்றுமாலை பொலிஸ் தலைமையகத்தில் நடைபெற்றது. இங்கு பொலிஸ் மாஅதிபர் மேலும் உரையாற்றுகையில், தேர்தல்கள் ஆணையாளரின் வேண்டுகோளுக்கிணங்க அமைதியானதும், சுதந்திரமானதுமான தேர்தல் ஒன்றை நடத்த தேவையான சகல ஒத்துழைப்புக்களை பொலிஸாரும், பாதுகாப்பு படையினரும் வழங்குவர். தேர்தல் சட்ட விதிமுறைகளை பொலிஸாரும், பாதுகாப்புப் படையினரும் கண்டிப்பாக அமுல்படுத்தத் தேவையான அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்த பொலிஸ் மாஅதிபர் சட்ட விதிமுறைகளை மீறுவோருக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக