சனி, 6 மார்ச், 2010

இலங்கை மனிதஉரிமை விடயமாக ஐ.நா செயலருக்கு ஆலோசனைக்குழு தேவையில்லை - ஜனாதிபதி

இலங்கையின் மனித உரிமை மீறல் தொடர்பான ஐக்கிய நாடுகள் சபை பொது செயலாளருக்கு ஆலோசனை வழங்கும் குழுவொன்று தேவையில்லை என ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இலங்கையின் மனித உரிமைகள் நிலவரங்கள் குறித்து தமக்கு அறிவிக்க, விசேட குழு ஒன்றை தாம் நியமிக்கவுள்ளதாக ஐ.நா பொது செயலாளர் பான் கீ மூன் அறிவித்திருந்தார். இது தொடர்பில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்ட பான் கீ மூன், இலங்கையின் யுத்தகால நிலைமைகளை ஆராய்வதற்கு இந்தக்குழு தேவைப்படுவதாக தெரிவித்திருந்தார். எனினும் இந்த தொலைபேசி உரையாடலின்போது கருத்து தெரிவித்த ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ, இலங்கையின் மனித உரிமைகள் குறித்து ஆராய்வதற்கு இவ்வாறான ஒரு குழு தேவையில்லை என தெரிவித்துள்ளார். இக்குழு இலங்கை அரசாங்கத்தின் எதிர்கால முன்னெடுப்புகளுக்கு தடையாக அமையும். அத்துடன் நீண்ட காலங்களுக்கு பின்னர் வடக்கில் தமது வேட்பாளரை தெரிவுசெய்வதற்கு தயாராகியுள்ள பொதுமக்களிடையேயும் குழப்பத்தை ஏற்படுத்தும். உலகின் பல நாடுகளில் யுத்த குற்றங்கள் இடம்பெற்றுள்ளதுடன், அங்கு பாரிய அளவில் மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றுள்ளன. அவற்றை ஆராய்வதற்கு ஐ.நா சபை இவ்வாறான முனைப்பை மேற்கொள்ளவில்லை என்றும் ஜனாதிபதி இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக