வியாழன், 18 மார்ச், 2010
நிபுணர் குழு அமைப்பதில் தாமதிக்கப் போவதில்லை -ஐ.நா செயலாளர் நாயகம்..!
இலங்கையின் இறுதி யுத்தகாலத்தில் இடம்பெற்றவை எனக் கருதப்படும் மனிதஉரிமை மீறல்கள் மற்றும் யுத்தக் குற்றங்கள் ஆகியவற்றுக்குப் பொறுப்புக்கூறும் விவகாரம் தொடர்பில் தமக்கு ஆலோசனை வழங்குவதற்கு நிபுணர் குழுவொன்றை நியமிப்பதைத் தாமதப்படுத்தப் போவதில்லை எனக் குறிப்பிட்டுள்ள ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் பான் கீ மூன், அந்நடவடிக்கை இலங்கையின் இறைமையை மீறும்செயல் அல்ல என்றும் தெரிவித்துள்ளார். இந்த விடயத்தை அணிசேரா அமைப்பு தவறாகப் புரிந்துகொண்டுள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார். அவர் நியூயோர்க்கில் செவ்வாய்க்கிழமை செய்தியாளர்களுக்கு இது தொடர் பாக மேலும் தெரிவித்துள்ளவை வருமாறு: அணிசேரா அமைப்பு எனக்கு எழுதிய கடிதம்குறித்து முதலில் கருத்துத் தெரிவிக்க விரும்புகிறேன். அவர்களுடைய கடிதத்தைப் பார்க்கும்போது, நான் அமைக்கவுள்ள நிபுணர்கள்குழு தொடர்பாகவும் அதன் நோக்கம் பற்றியும் புரிந்துணர்வின்மை நிலவுவதை உணரமுடிகின்றது. இதுகுறித்து நான் நேரடியாக அவர்களுடன் பேசுவேன். இலங்கைக்கான எனது விஜயத்தின்போது அந்நாட்டின் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவைச் சந்தித்தவேளை, இருவரும் இணைந்து விடுத்த அறிக்கையைப் பின்பற்றியே நிபுணர்கள் குழுவை நான் நியமிக்கவுள்ளேன். சர்வதேச மனித உரிமைகள் மற்றும் மனிதாபிமானச் சட்டங்கள் மீறப்பட்டமை தொடர்பாகப் பொறுப்புக் கூறுவதற்கான நடைமுறை ஒன்றை உருவாக்குவது பற்றிய உறுதிமொழி அந்தக் கூட்டறிக்கையில் இடம்பெற்றிருந்தது. நான் நியமிக்கவுள்ள குழுவினர் சர்வதேச அனுபவத்தின் அடிப்படையில் இந்த விடயங்கள் குறித்து எனக்கு ஆலோசனை வழங்குவர். இந்த நிபுணர் குழு நேரடியாக என்னிடமே அறிக்கை சமர்ப்பிக்கும். வேறு எந்த அமைப்பிற்கும் அல்ல. இது முற்றிலும் எனது அதிகாரத்திற்கு உட்பட்ட விதத்திலேயே இடம்பெறுகின்றது என நான் கருதுகிறேன். இந்த விடயங்கள் குறித்து ஆலோசனை வழங்குமாறு அவ்வாறான குழுவொன்றிடம் வேண்டுகோள் விடுப்பதற்கான அதிகாரம் ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் என்ற வகையில் எனக்குள்ளது என உறுதியாக நம்புகிறேன். இது எந்த வகையிலும் இலங்கையின் இறைமையை மீறும்செயலாக அமையாது. இவ்வாறான நிபுணர்குழுவை அமைப்பது எவ்விதத்திலும் தாமதமாகாது என்பதைத் தெளிவுபடுத்த விரும்புகின்றேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக