வியாழன், 18 மார்ச், 2010

உலகிலேயே 4 ஆவது இராணுவ பலம்கொண்ட இந்திய படையினராலேயே பிரபாகரனை தேட முடியாமல் போனது -மைத்திரிபால சிறிசேன..!!

உலகிலேயே நான்காவது இராணுவ பலத்தைக்கொண்ட இந்தியாவின் ஒரு இலட்சம் எண்ணிக்கையைக்கொண்ட இராணுவத்தினராலேயே புலிகளின் தலைவர் பிரபாகரனை அன்று தேட முடியாமல் போன நிலையில் எமது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமைத்துவத்தின் கீழ் புலிகள் தோற்கடிக்கப்பட்டனர். இது பாரிய சாதனையாகும் என்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலாளரும் விவசாய அபிவிருத்தி அமைச்சருமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.
நாட்டை மீட்டெடுத்த ஜனாதிபதி தலைமையில் தற்போது மக்கள் ஒன்றிணைந்துள்ளனர் என்றும் அவர் குறிப்பிட்டார்.
கொழும்பு மகாவலி கேந்திர நிலையத்தில் நேற்று புதன்கிழமை காலை நடைபெற்ற விசேட செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அமைச்சர் அங்கு மேலும் கூறியதாவது உலகிலேயே நான்காவது இராணுவ பலத்தைக்கொண்ட இந்தியாவின் ஒரு இலட்சம் எண்ணிக்கையைக்கொண்ட இராணுவத்தினர் இலங்கைக்கு வந்து புலிகளின் தலைவர் பிரபாகரனை தேட முடியாமல் போன நிலையில் தோல்வியுடன் திரும்பி சென்றனர். அவர்களால் பிரபாகரனை அன்று தேட முடியவில்லை. ஆனால் எமது ஜனாதிபதியின் தலைமைத்துவத்தின் கீழ் புலிப்பயங்கரவாதம் தோற்கடிக்கப்பட்டது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இந்த நாட்டை மீட்டெடுத்தார். நாட்டை ஒருமைப்படுத்தினார். தற்போது மக்கள் ஒன்றிணைந்துள்ளனர்.
யார் என்ன கூறினாலும் ஒருகாலத்தில் இந்த நாட்டின் ஒரு பகுதி புலிகளின் பிரபாகரனின் கட்டுப்பாட்டில் இருந்தது. ஈழ நீதி மன்றம் பொலிஸ் என அமைக்கப்பட்டிருந்தன. தனிநாடு என்ற விடயம் உத்தியோக பூர்வமாக அறிவிக்கப்படவில்லையே தவிர ஒரு பகுதி புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்தது. ஆனால் அதனை ஜனாபதி தோற்கடித்தார். இந்த நாட்டை ஒருமைப்படுத்தினார்.
சீனா ஜப்பான் மற்றும் இந்தியா போன்ற நாடுகளின் வளர்ச்சியை நாம் பார்க்கும்போது அந்த நாடுகளின் மக்களின் மத்தியில் ஒற்றுமையும் பொதுவான நோக்கமும் காணப்பட்டது. அந்த வகையில் இன்று எமது நாட்டு மக்கள் பாரிய ஒற்றுமை என்ற விடயத்துக்கு வந்துள்ளனர். பிரிட்டனிடமிருந்து நாங்கள் சுதந்திரம் பெற்ற பின்னர் தற்போதுதான் மக்கள் ஒற்றுமையுடன் உள்ளனர்.
பயங்கரவாதத்தை தோற்கடிக்கும் முயற்சிக்காக அன்று மக்கள் விடுதலை முன்னணியின் ஆதரவை ஜனாதிபதி கோரினார். ஆனால் அவர்கள் அரசாங்கத்திலிருந்து விலகிச் சென்றனர். அன்று மக்கள் விடுதலை முன்னணி எம்முடன் இணைந்திருந்தால் கடந்த வருடம் மே 19ஆம் திகதியின் பின்னர் மக்கள் விடுதலை முன்னணி மிகப்பெரிய கௌரவத்தை பெற்றிருக்கும்.சிலவேளை சுதந்திர கட்சியைவிட அதிக செல்வாக்கை மக்கள் விடுதலை முன்னணி அடைந்திருக்கும். ஆனால் கட்சியின் தலை மைகள் எடுத்த தவறான அரசியல் தீர்மானங்கள் காரணமாக இன்று ஏற்பட்டுள்ள நிலைமை புரிகின்றது.
அதேபோன்று அரசாங்கத்துக்கு ஆதரவு வழங்கும்படி ஐக்கிய தேசிய கட்சியிடமும் கோரிக்கை விடுத்தோம். அவர்கள் ஆதரவு வழங்குவதாக கையெழுத்திட்டுவிட்டு உடன்படிக்கையை மீறினர். ஐக்கிய தேசிய கட்சி தொடர்ந்து ஆதரவு வழங்கியிருந்தால் இன்று அந்தக் கட்சி பாரிய செல்வாக்கை பெற்றிருக்கும். அந்தவகையில் எதிர்க்கட்சிகள் தவறான அரசியல் தீர்மானங்களை மேற்கொண்டன என்றே கூறவேண்டும். இன்று எதிர்க்கட்சிகளினால் பிரசார கூட்டங்களைக்கூட நடத்த முடியாமல் போயுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக