வியாழன், 18 மார்ச், 2010

ரத்தத்தைக் கொட்டி தாய்லாந்தில் போராட்டம்..!!

தாய்லாந்து பிரதமர் பதவியிலிருந்து அகற்றப்பட்ட தக்சின் சினவத்ராவின் ஆதரவாளர்கள் நடத்தி வரும் போராட்டம் மிகவும் மோசமான நிலையை எட்டியுள்ளது. தானமாக ரத்தத்தைப் பெற்று அதை பிரதமர் வீட்டின் முன்பு கொட்டி போராட்டக்காரர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர். தாய்லாந்தில் பிரதமராக இருந்தவர் தக்சின் சினவத்ரா. ராணுவப் புரட்சி நடத்தி இவரை பதவியிலிருந்தும், நாட்டை விட்டும் விரட்டி விட்டனர். இப்போது பிரதமராக இருப்பவர் அபிஷித் விஜஜெவா. இவருக்கு எதிராக தக்சினின் ஆதரவாளர்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். ஆட்சியைக் கலைக்க வேண்டும், தேர்தலை நடத்த வேண்டும் என்று அவர்கள் கோரி வருகின்றனர். கடந்த ஞாயிற்றுக்கிழமை ஒரு லட்சம் பேர் கலந்து கொண்ட பிரமாண்டப் பேரணி நடந்தது. இந்த நிலையில் நேற்று ரத்தத்தை தானமாக பெற்றனர் தக்சின் ஆதரவாளர்கள். பின்னர் அதை பிரதமர் விஜவேவா வீட்டின் முன்பு கட்டி போராட்டம் நடத்தினர். கிட்டத்தட்ட 10 லட்சம் கியூபிக் சென்டிமீட்டர் அளவிலான ரத்தத்தை கொட்டி வீணடித்து போராட்டம் நடத்தினர். தக்சின் ஆதரவாளர்களின் இந்தப் போராட்டத்தால் பரபரப்பு ஏற்பட்டது. இந்தப் போராட்டம் குறித்து அரசுத் தரப்பி்ல் அதிகாரப்பூர்வ கருத்து தெரிவிக்கப்படவில்லை. ஆனால் அமைச்சர் சலித் ஓங்கோன்டேயி என்பவர் கூறுகையில், இது மிகவும் காட்டுமிராண்டித்தனமானது. ரத்தம் வன்முறையின் அடையாளம். அதை வீட்டின் முன்பு கொட்டியது மிகவும் வேதனை தருகிறது. இந்த சம்பவம் பிரதமரை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக