சனி, 13 மார்ச், 2010

பஞ்சாங்கங்களின் குழப்பத்தால் இரண்டாயிரத்து பத்தாம் ஆண்டு இந்துக்கள் மகா சிவராத்திரியை இரு தடவை..!

பஞ்சாங்கங்களின் குழப்பத்தால் இரண்டாயிரத்து பத்தாம் ஆண்டு இந்துக்கள் மகா சிவராத்திரியை இரு தடவை அனுஷ்டிக்க வேண்டிய நிலைக்குள்ளாகினர். ஒரு பஞ்சாங்கத்தில் கடந்த பெப்ரவரி மாதம் பன்னிரெண்டாம் திகதி மகா சிவராத்திரி விரதமெனக் கூறப்பட்டுள்ளது. அதேவேளை திருக்கணித பஞ்சாங்கம் நாளைய தினமான மார்ச் பதின் மூன்றாம் திகதியே மகா சிவராத்திரி என்று தெளிவுபடுத்தியுள்ளது. இதனால் இந்து ஆன்மீகவாதிகளில் பலர் மகாசிவராத்திரி விரதத்தை பக்தி பரவசத்துடன் நாளை இரவு அனுஷ்டிக்க ஆயத்தமாகியுள்ளனர்.
இதேபோன்று சிவராத்திரி தினத்தை தெரிவு செய்வதில் நாற்பத்தாறு ஆண்டுகளுக்கு முன்னரும் குழறுபடி ஏற்பட்டதாம். சிவாச்சாரியார்கள் எடுத்த ஏகோபித்த முடிவுகளின் பிரகாரமும் அது தீர்த்து வைக்கப்பட்டதென்றும் அறிய முடிகின்றது.
ஏலவே இந்துக்களின் மனதில் சிவசிந்தனை தன்னிச்சையாகவே உருவாகின்ற நாளைய மகா சிவராத்திரி பற்றி விரிவாக ஆராய்வது இங்கு உசிதமாகும். ‘சிவாயநம’ என்ற மந்திரத்தை சதா மனதில் எண்ணிக் கொண்டோருக்கு அபாயங்கள் அணுகாது என்பதை உறுதியாக நம்பலாம். இதனால் இவர்கள் வாழ்வில் அல்லல்பட வேண்டிய நிலை ஏற்படாது.
இந்து மதத்தினரின் முழு முதல் கடவுளான சிவபெருமானை ‘ஓம் நமசிவாய’ என்று நித்தமும் நினைக்க வேண்டும் என்பது இந்து ஆன்மீகவாதிகளின் போதனைகளிளொன்றாகும். பொதுவாக மாசித்திங்களில் வருகின்ற சிவராத்திரி விரதத்தில் சிவ வழிபாட்டினை ஆன்மாக்கள் முத்தி பெறுவதற்காகவே அனுஷ்டிக்கின்றனர் என்பது வெள்ளிடை மலை.
நாளையதினம் சிவராத்திரி என்பதால் சிவாலயங்கள் அனைத்திலும் இவ்விரதம் பக்தி பரவசத்துடன் நடைபெறவுள்ளது. ஆகவே சிவராத்திரி விரதத்தின் மகோன்னத நெறிமுறைகள் தொடர்பாகவும் தெரிந்து கொள்வது சாலச்சிறந்ததாகும்.
மகா என்றால் பெரிய அல்லது மகோன்னத என்று பொருள்படும். சிவன் என்றால் துன்பம், ஆபத்து, இடர் போன்றவற்றை அடியோடு இல்லாமல் செய்பவன் எனக் கொள்ளலாம். சிவராத்திரி என்பது சுகத்தை நல்குவதாகும். இது மன வேதனையை போக்கி ஆரோக்கியத்தைக் கொடுப்பது உறுதி. எனவே மகா சிவராத்திரி நமக்கு வசந்தம், நல்வாழ்வு என்பவற்றை நிச்சயம் கொடுக்கும் என்பது உள்ளங்கை நெல்லிக்கனியாகும்.
சிவராத்திரி என்றால் நித்திய சிவராத்திரி, பக்ஷ சிவராத்திரி, மாதசிவராத்திரி, யோக சிவராத்திரி என்று தொடர்கின்றது. மாலை நான்கு முப்பது தொடக்கம் ஆறு முப்பது வரையுள்ள சுபவேளை சிவதர்சனத்திற்கு உகந்த காலமாகும். அமாவாசையும் சோமவாரமும் ஒன்றிணைந்து உருவாகும் பட்சத்தில் அந்தநாள் யோக சிவராத்திரி எனப்படும். திங்கள் தோறும் தேய்பிறை சதுர்த்தசியில் உண்டாவது மாத சிவராத்திரி ஆகும். மாசி மாத கிருஷ்ண பக்ஷ சதுர்த்தசியில் வருவது மகா சிவராத்திரி எனப்படுகின்றது. சிவராத்திரி பற்றி அப்பர் சுவாமிகள் என்ன கூறுகின்றார் என்பதைப் பார்ப்போம்.
“செங்கணானும் பிரமனும் தம்முன்னே
எங்கும் தேடித்திரிந்தவர் கான்கிலார்
இங்குற்றேன் என்று இலிங்கத்தே தோன்றினான்
பொங்கு நெருசுடைப்புண்ணிய மூர்த்தியே” என்பதாகும்.
அதேவேளை இவ்விரதம் சம்பந்தமாக திருமந்திரம் இவ்வாறு இயம்புகின்றது.
“பிரமனும் மாலும் பிரானே நான் எனப்
பிரமன்மால் தங்கள் தம்பேதமையாலே
அனலாய்ப்பரந்து முன்நிற்க
அரனடிதேடி ஆற்றுகின்றாரே”
எனப்படுகின்றது.
அதாவது பிரமனும் விஷ்ணுயும் தம்முன்னே யார் பெரியவர் என்பது தொடர்பாக கருத்துவேறுபட்ட நிலையில் தீர்வுகாணும் பொருட்டு சிவபெருமானிடம் சென்றார்கள். அவர் உடனே சிவலிங்கத்திருமேனியாகி அதனுள்ளே பெரும் ஜோதியாக பரிணமித்துக் கொண்டார். ஜோதியானது ஆதியும் அந்தமும் இல்லாத அருட்பெரும் ஜோதி எனவும் கொள்ளலாம்.
பாதாளமும் மேல்லோகமும் வரை ஜோதி அபரிமிதமாகப் பிரகாசித்தது. இந்த பிளம்ப தோர் மேனியின் அடியையோ இன்றேல் நுனியையோ யார் கான்கின்றாரோ அவறே பெரியவர் என ஓர் பந்தயத்தை சிவவெருமான் தொடக்கிவைத்தார்.
ஈற்றில் பிரம்மாவும் விஷ்ணுவும் அடியையோ முடியையோ கண்டுபிடிக்க முடியாமல் திண்டாடினார்கள். இறுதியில் இருவருக்கும் நான் என்ற மமதை நீங்கி சிவனை வழிபடலாயினர். அவ்வேளையில் சிவலிங்கத் திருமேனியுள் நான் வீற்றிருக்கின்றேன் என அவர்களுக்கு உபதேசித்து அருளினார்.
சிவராத்திரி பற்றி கந்தபுராணம் கூறவதைச் சற்று நோக்குவோம். திருக்கைலாயத்தில் உமாதேவியார் சிவபெருமானது இருகண்களையும் விளையாட்டாக பொத்தவே சர்வலோகமும் இருள்மயமாகிவிட்டது. மானிடர் செய்வதறியாது அல்லலுற்றனர்.
எனவே இந்த இயற்கை அனர்த்தத்தை நீக்க உமை அம்மை நான்கு ஜாமமும் சிவபூஜை மேற்கொண்டார். எனவே இது சிவசக்தி அம்சம் கொண்ட நாளாயிற்று. சிவலிங்கத் திருமேனியும் இதனையே வலியுறுத்துகின்றது என்றும் கூறலாம். சிவபெருமான் சிவலிங்கத்திருமேனியில் ஜோதியாக உருவாகிய முகூர்த்தம் லிங்கோர்பவர் முகூர்த்தமாகும்.
நேரம் இரவு பதினொன்று முப்பது முதல் பன்னிரெண்டு வரையுள்ள காலமாகும். சிவாலயப்பின் பிரகாரத்தில் மேற்கே தீர்க்க விருத்தமாக அதாவது வட்டவடிவில் அமைந்துள்ளதே லிங்கோற்ப மூர்த்தியாகும். இங்கே ஆதியும் அந்தமும் தான் சிவாலயங்களில் ருத்திறாபிஷேகம் மேற்கொள்ளுமுன் சிவாச்சாரியார் தியானம் செய்வார். அதன் அர்த்தம் என்னவெனில் “பாதாளம் தொடக்கம் ஆகாசம் பரிபயந்தம் உள்ள மூர்த்திக்கு அபிஷேகம் செய்யப்போகின்றேன்” என்பதாகும.
சிவராத்திரி தினத்திற்கு முதல் நாளன்று சிவபூஜை செய்தபின் ஒருவேளை உணவை உட்கொள்ள வேண்டும். சிவராத்திரி தினம் உபவாசமாக இருந்து அடுத்தநாள் அதிகாலை பாறணை செய்தல் வேண்டும். சிவராத்திரி அன்று சந்தியாவந்தனம், ஜெபம், சிவபூஜை என்பன இன்றியமையாததாகும். நமச்சிவாய திருப்பதிகம், திருநீற்றுத் திருப்பதிகம், சிவாயநம பாரணப்பாடல்களைப் படிக்கலாம், பாராயணஞ் செய்யலாம். லிங்கபுராணத்தை சிவராத்திரியன்று படித்தல் உத்தமமாகும். இவற்றை எல்லாம் நிறைவேற்ற முழு இரவும் பக்தியுடன் கண்விழித்து இருக்க வேண்டிய நிலைமை உண்டாகின்றது.
சிவராத்திரியன்று இரவு சிவவழிபாடு இன்றியமையாததொன்று என்பது யதார்த்தமாகும். சிவாலயங்களில் நான்கு ஜாமப் பூஜைகளும் சிறப்புற இடம்பெறும். முதலாம் ஜாமத்தில் பஞ்சகவ்யம், சந்தனக்குழம்பு போன்றவை சாத்தப்படுகின்றன. பயற்றன்னம் நைவேதிக்கப்படுகின்றது. வில்வம் இலையால் அர்ச்சிக்கப்படும் இரண்டாம் ஜாமத்தில் அமிர்தம், அகிற் குழம்பு என்பன சாத்தப்படும்.
மூன்றாம் ஜாமம் ஆனதும் லிங்கோற்பவர் காலகாதலினால் தேன், பச்சைக்கற்பூரம், தாமரை போன்றவை சாத்தப்பட்டு எள்ளுச்சாதம் நைவேதிக்கப்பட்டு ஷன்பகம், ஜாதிமுல்லை, வில்வம் இலை என்பவற்றால் அர்ச்சிக்கப்படும். நான்காம் ஜாமத்தில் கருப்பஞ்சாறு, குங்குமப்பூ என்பவை சாத்தி சுத்த அன்னம் நைவேதிக்கப்படும்.
பாறணை செய்யுமுன் சிவாச்சாரியாருக்கும், சிவனடியாருக்கும் திருவமுது ஒழுங்குகள் மேற்கொள்ள வேண்டும். அன்று காலை சிவதரிசனத்திற்குப்பின் பாறணை செய்து மகா சிவராத்திரி விரதத்தை நிறைவு செய்து கொள்ள வேண்டும். இவ்விரதம் இருபத்து நான்கு அல்லது பன்னிரெண்டு ஆண்டுகள் தொடர்ந்து அனுஷ்டிக்கப்பட வேண்டும்.
சிவராத்திரியானது எவ்வாறு சிவசக்தி அம்சம் கொண்டதோ அதேபோன்று வில்வர்ச்சனை சிவராத்திரிக்கு பிரதானமானதொன்றாகக் கருதப்படுகின்றது. திரிதலம், திரிகுணாகாரம், திருநேத்திரம், சத்ராயுதபதம், திரிஜென்ம பாசம், ஹாரம், ரகவில்லம், சிவ வர்ப்பணம் என்பவையே அவையாகும்.
நான்கு ஜாமச் சிறப்பு பூஜைகள் நிகழுகின்ற உன்னத மகா சிவராத்திரி விரதத்தை இந்து ஆன்மீகவாதிகள் அனைவரும் சிவ அம்சம் பொருந்திய சிந்தனையுடன் அனுஷ்டிப்பதைக் காணக்கூடியதாகவுமுள்ளது.
இலங்கை வாழ் இந்துக்கள் சிவராத்திரியன்று மன்னார் மாதோட்டத்தின் பாலாவிக்கரையில் அமைந்துள்ள பாடல்பெற்ற ஈழத்து சிவ தலங்களிளொன்றான திருக்கேதீஸ்வரம் சென்று சிவராத்திரி விரதத்தை நிறைவு செய்து கொள்கின்றனர்.
அதேவேளை நம் நாட்டில் வாழுகின்ற இந்து பக்தர்களின் வேண்டுகோளைச் செவிமடுத்த அரசு திருக்கேதீஸ்வர ஆலய சுற்றாடலை புனித பூமியாகப் பிரகடனப்படுத்தியுள்ளது.
மகா சிவராத்திரி தினமாகிய நாளை இந்து பக்தர்களின் நலன்கருதி மார்ச் பதின் மூன்றாம் திகதியை ஓய்வு நாளாகவும் ஆக்கியுள்ளனர். உலகெங்கிலுமுள்ள சிவாலயங்களில் நான்கு ஜாமப் பூஜைகள் சிறப்பாக நடைபெறுகின்ற மகா சிவராத்திரி விரதத்தை ஏராளமான இந்துக்கள் அனுஷ்டிப்பதையும் காணக்கூடியதாகவுமுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக