ஞாயிறு, 28 மார்ச், 2010

முகாம்களிலுள்ள 80ஆயிரம்பேரை ஜூன் இறுதிக்குள் மீள்குடியமர்த்த நடவடிக்கை

வவுனியா முகாம்களிலுள்ள சுமார் 80ஆயிரம் பேரும் எதிர்வரும் ஜூன்மாத இறுதிக்குள் குடியேற்றப்பட்டுவிடுவரென நம்பிக்கை தெரிவித்துள்ள வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம். சாள்ஸ், அடுத்தமாத இறுதிக்குள் கிளிநொச்சி, மன்னார், வவுனியா, வவுனியா வடக்குப் பகுதிகளிலுள்ள பிரதேச செயலகப் பிரிவுகளின் தொண்ணூறு சதவீதமான கிராமங்களில் மக்கள் குடியேற்றப்பட்டு விடுவரெனவும் கூறியுள்ளார். வவுனியா அகதிமுகாம் மக்கள் மற்றும் அவர்களது மீள்குடியேற்றம் தொடர்பில் ஊடகமொன்றுக்கு கருத்துத் தெரிவிக்கையிலேயே இந்தத் தகவல்களை அவர் வெளியிட்டுள்ளார். அவர் மேலும் தெரிவித்ததாவது, வவுனியாவில் கடந்த காலங்களில் 20முகாம்களில் 2,89,000 மக்கள் தங்கியிருந்தனர். ஆனால், தற்போது நான்கு முகாம்கள் மட்டுமே இயங்குகின்றன. இவற்றில் சுமார் 80ஆயிரம் மக்கள் உள்ளனர். இவர்கள் சுதந்திர நடமாட்டத்துக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். அனைவரும் எதிர்வரும் ஜூன்மாத மாதஇறுதிக்குள் குடியேற்றப்பட்டு விடுவர். அகதி முகாம்களில் தற்போது தங்கியுள்ள மக்களில் அங்கவீனமுற்ற அனைவரும் எதிர்வரும் முதலாம் திகதி விடுவிக்கப்பட்டு அவர்கள் தங்களது சொந்த இடங்களுக்குச் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஓமந்தையில் தொழில்நுட்பக் கல்லூரி ஓமந்தையில் 500 மில்லியன் ரூபாசெலவில் தொழில்நுட்பக் கல்லூரியொன்று அமைக்கப்படவுள்ளது. அதேபோன்று நெடுங்கேணியில் 100மில்லியன் ரூபா செலவில் நீர்விநியோகத் திட்டமொன்றும் புதிதாக உருவாக்கப்படவுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக