வெள்ளி, 5 செப்டம்பர், 2014

"வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் இந்தியா செல்லவேண்டுமானால் வடக்கு மாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறியின் அனுமதி பெற்றேயாகவேண்டும். அரசமைப்பின் பிரகாரம் முதலமைச்சர் வெளிநாடு செல்வதாயின் ஆளுநரிடம் அனுமதி பெறுவது கட்டாயமாகும்." - இவ்வாறு அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல தெரிவித்தார்.

"இந்தியாவின் மாநிலங்களுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைவிட
இலங்கையின் 13ஆவது அரசமைப்பு திருத்தச் சட்டம் வலுவானதாகும். இந்தியாவில் எந்தவொரு மாநிலத்தையும் பிரதமரால் கலைக்க முடியும். ஆனால், இலங்கையில் மாகாணசபை ஒன்றை ஜனாதிபதியினால் கலைக்க முடியாது. முதலமைச்சரின் விருப்பத்தின் பேரிலேயே அதனைச் செய்ய முடியும்" என்றும் அவர் குறிப்பிட்டார்.

"பொலிஸ் அதிகாரங்களைத் தவிர்த்து 13ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக அமுல்படுத்தத் தயார் என்று இலங்கை அரசு முழு உலகத்துக்கும் அறிவித்துவிட்டது. இதேவேளை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடனும் அரசு பேச்சுக்குத் தயார். ஆனால், 13ஆவது திருத்தச் சட்டம் குறித்துப் பேசுவதாயின் அது நாடாளுமன்றத் தெரிவுக்குழுவிலேயே முடியும்" என்றும் அவர் குறிப்பிட்டார்.

ஊடகத்துறை அமைச்சில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்ட அமைச்சரிடம் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளிக்கையிலேயே அவர் மேற்படி விடயங்களைத் தெரிவித்தார். இலங்கை அரசியல் யாப்புக்கு அமைய உயர் பதவி வகிக்கும் அரச அதிகாரிகள் வெளிநாடு செல்லும்போது அரசிடம் முன்அனுமதி பெற்றுக்கொள்வது அவசியமென்று தெரிவித்த ரம்புக்வெல்ல, மாகாண அமைச்சரொருவர் வெளிநாடு செல்லும்போது அவர் முதலமைச்சருக்கு அறிவிக்க வேண்டுமென்று தெரிவித்தார்.

அதே போலவே மாகாண முதலமைச்சர் வெளிநாடு செல்லும்போது அதற்கான அறிவித்தலை மாகாண ஆளுநரிடம் சமர்ப்பிக்க வேண்டுமென்றும் கூறினார் அமைச்சர் ரம்புக்வெல்ல. வடமாகாண முதலமைச்சர் இவ்வாறான வேண்டுகோளொன்றை சமர்ப்பித்தால் எடுக்கப்படவுள்ள தீர்மானம் குறித்து கேட்டபோது அதனை தற்போது கூறமுடியாது என்று பதிலளித்த ரம்புக்கவெல்ல, அதற்கான வேண்டுகோள் அரசுக்கு சமர்ப்பிக்கப்பட்ட பின்னர் அது குறித்து ஆராய்ந்து தகுந்த தீர்மானம் எடுக்கப்படும் என்று தெரிவித்தார். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக