ஞாயிறு, 28 மார்ச், 2010

மட்டக்களப்பில் பொதுமக்கள் மீது முதலமைச்சர் பிள்ளையான் குழு தாக்குதல்

மட்டக்களப்பு கொக்குவிலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பிரசார கூட்டத்தில் கலந்து கொள்ள சென்ற பொதுமக்கள் மீது கிழக்கு மாகாண முதலமைச்சர் பிள்ளையான் தலைமையிலான குழு இன்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் தாக்குதல் நடத்தியுள்ளது.
இச்சம்பவத்தில் பிள்ளையாரடி கொக்குவில் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் சிலர் காயமடைந்துள்ளனர். இது தொடர்பாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைமை வேட்பாளர் பொன். செல்வராசாவும் வேட்பாளர் பிரசன்னா இந்திரகுமாரும் இன்று பிற்பகல் மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.இன்று பிற்பகல் மட்டக்களப்பு கொக்குவில் ஆலமரத்தடியில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பிரசாரக் கூட்டம் இடம்பெற இருந்தது. பிற்பகல் 4.00 மணிக்கு கூட்டம் ஆரம்பமாக இருந்த நிலையில் சுமார் 3.00 மணியளவில் கிழக்கு மாகாண முதலமைச்சர் பிள்ளையான் மற்றும் மாகாணசபை உறுப்பினர் பிரசாந்தன் ஆகியோர் தலைமையில் 13 வாகனங்களில் விசேட அதிரடிப் படையினரின் பாதுகாப்புடன் சென்ற குழுவினர் அங்கு கூடி இருந்த மக்கள் மீதும் கூட்ட ஏற்பாடுகளை செய்து கொண்டிருந்த மக்கள் மீதும் கண்மூடித்தனமான முறையில் தாக்குதல் நடத்தியதாக கொக்குவில் பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.
அங்கு கட்டப்பட்டிருந்த பனர்கள் மற்றும் கொடிகளையும் கிழித்து எறிந்ததுடன் தற்காலிகமாக அமைக்கப்பட்டிருந்த மேடையையும் சேதமாக்கியுள்ளனர். பிள்ளையான் குழுவினர் சுமார் ஒரு மணிநேரமாக அந்த இடத்தில் நின்று தாக்குதல் நடத்தியதாக தெரிவிக்கப்படுகிறது.
இதனையடுத்து அக்கூட்டம் ரத்துச் செய்யப்பட்டுள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு வேட்பாளர் பிரசன்னா இந்திரகுமார் தெரிவித்தார்.
நேற்று கொக்குவில் பிள்ளையாரடி சத்துருக்கொண்டான் பகுதிகளுக்கு தேர்தல் பிரசாரங்களுக்கு சென்றவர்களை அங்கிருந்த பொதுமக்கள் ஏசித்துரத்தியதாக தெரியவருகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக