வியாழன், 4 பிப்ரவரி, 2010

இலங்கையின் 62வது சுதந்திரதினத்தை முன்னிட்டு நாடுமுழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகள் ஏற்பாடு..!

இலங்கையின் 62வது சுதந்திரதினம் இன்றாகும். இதனை முன்னிட்டு நாடுமுழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. சுதந்திரதின பிரதான வைபவம் இம்முறை கண்டி, தலதா மாளிகை வளாகத்தில் நடைபெறவுள்ளது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் காலை 8.30 மணிக்கு பிரதான வைபவம் கோலாகலமாக ஆரம்பமாகவுள்ளது. இதனை முன்னிட்டு கண்டி நகரம் உட்பட அதனை அண்மித்த பிரதேசங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதுடன் 10ஆயிரத்துக்கு மேற்பட்ட பொலிஸாரும் முப்படையினரும் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, அவரது பாரியார் ஷிரந்தி ராஜபக்ஷ, பிரதமர் ரத்னசிறி விக்கிரமநாயக்க, சபாநாயகர் டபிள்யூ. ஜே.எம். லொக்கு பண்டார, பிரதம நீதியரசர் அசோக்க டி.சில்வா, பொதுநிர்வாக உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் கலாநிதி சரத்அமுனுகம, உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் சந்திரசிறி கஜதீர, மத்தியமாகாண ஆளுநர் டிக்கிரி கொப்பேகடுவ, மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்க, மற்றும் அமைச்சர்கள், பிரதியமைச்சர்கள், வெளிநாட்டு தூதுவர்கள் பலர் கலந்துகொள்ளவுள்ளனர். பாதுகாப்புப் படை சார்பில் பாதுகாப்பு படைகளின் பிரதம அதிகாரி எயார் சீப்மார்ஷல் ரொஷான் குணதிலக்க, முப்படைகளின் தளபதிகள் மற்றும் பொலிஸ் மாஅதிபர் ஆகியோர் கலந்துகொள்ளவுள்ளனர். சம்பிரதாய முறைப்படி இம்முறையும் இராணுவம், கடற்படை, விமானப்படை, பொலிஸார் மற்றும் சிவில் பாதுகாப்புப் படையினரின் மரியாதை அணிவகுப்புக்கள் இடம்பெறவுள்ளன. இன்றைய சுதந்திரதின பிரதான வைபவத்தின் மரியாதை அணிவகுப்பில் பாதுகாப்புப் படைகளைச் சேர்ந்த 2514பேர் பங்கு கொள்ளவுள்ளனர். இராணுவத்தைச் சேர்ந்த 1450 வீரர்களும், இலங்கை விமானப்படையைச் சேர்ந்த 250வீரர்களும், இலங்கை கடற்படையைச் சேர்ந்த 314வீரர்களும், பொலிஸார் 250வீரர்கள் மற்றும் சிவில் பாதுகாப்புப்படையைச் சேர்ந்த 250வீரர்களும் பங்குகொள்ளவுள்ளனர். இதேவேளை, வடக்கு, கிழக்கு உட்பட நாட்டின் 21கலாசார மத்திய நிலையங்களைச் சேர்ந்த 1000 நடன மற்றும் நாட்டிய கலைஞர்களும், ஆயிரம் மாணவ, மாணவியரும் கலந்து கொள்ளவுள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக