ஞாயிறு, 24 ஜனவரி, 2010

யாழ்ப்பாணத்தில் இந்தியத் துணைத் தூதரகம்..!!

யாழ்ப்பாணத்தில் இந்தியத் துணைத் தூதரகத்தை அமைப்பதற்கான கொழும்பின் பதிலை டெல்கி எதிர்பார்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த மே மாதம் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்டு முடிவுக்கு வந்த ஈழப்போர்-IVயை அடுத்து இந்தியா யாழ்ப்பாணத்தில் ஒரு துணைத் தூதரகத்தை அமைப்பது குறித்து தனது ஆர்வத்தை இலங்கை அரசுக்கு தெரிவித்திருந்தது.
மூன்று சகாப்த சிவில் யுத்தத்தால் உருக்குலைந்து போன வடமாகாணத்தை மீள்கட்டமைக்க இலங்கை அரசுக்கு வேண்டிய அனைத்து உதவிகளையும் வழங்க இந்தியா முன்வந்துள்ளது. வடபகுதியை புனருத்தாரனம் செய்யும் பாரிய பணிக்கு இந்தியா பாரியளவில் உதவ முன்வந்திருக்கும் ஆர்வத்தைக் கருத்தில் கொண்டு, யாழ்ப்பாணத்தில் இந்தியத் துணைத் தூதரகம் அமைவதில் இலங்கைக்கு ஆட்சேபனை இருக்காதென கொழும்பு ராஜதந்திர வட்டாரங்கள் கருத்துத் தெரிவித்துள்ளன.
யாழ்ப்பாணத்தில் துணைத் தூதரகம் திறப்பதன் மூலம் இந்திய நிதியுதவியுடன் வடபுலத்தில் செயல்படுத்தப்படும் திட்டங்களை நேரடியாகக் கண்காணிக்கக் கூடியதாக இருக்கும். அத்துடன், பாக்கு நீரிணைக்கு இரு மருங்கிலும் உள்ள மக்களை இணைக்கும் ஒரு பாலமாகவும் துணைத் தூதரகம் இருக்கும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
இலங்கையில் தனது தூதரகத்தை கொழும்பிலும் துணைத் தூதரகம் ஒன்றை கண்டியிலும் இந்தியா கொண்டுள்ளது போல டெல்கியில் தனது தூதரகத்தையும் சென்னை, மும்பாய் மற்றும் கொல்கத்தா போன்ற நகரங்களில் துணைத் தூதரகங்களையும் இலங்கை வைத்திருக்கிறது.
தற்சமயம், வடபுலத்தில் நிலக்கண்ணி அகற்றும் ஆறு இந்திய அணியினர் செயற்பட்டு வருகின்றனர்.
ஓமந்தையில் இருந்து பளை வரைக்குமானதும் மடுவிலிருந்து தலைமன்னார் வரைக்குமானதுமான இரு முக்கிய ரயில் பாதைகளை மீள்கட்டமைக்க இந்திய ரயில்வே அமைச்சின் கீழ் இயங்கும் ஒரு பொது முகாமைத்துவ கம்பனி மூலம் 425 மில்லியன் அமெரிக்க டொலர் கடனுதவித் திட்டத்தை இந்திய அரசு அண்மையில் அறிவித்திருந்தது.
கொழும்புக்கு அடுத்ததாக இலங்கையின் இரண்டாவது மிகப்பெரிய சிவில் மற்றும் இராணுவ விமான நிலையமான யாழ். பலாலி விமான நிலையம், ஐந்து வருடங்களுக்கு முன், யுத்தத்தில் பலத்த தேசத்துக்குக்குள்ளான போது அதனை மீள் புனரமைக்கும் பாரிய பணியினை இந்தியா செய்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக