ஞாயிறு, 10 ஜனவரி, 2010

நாட்டின் பல்வேறு சிறைகளிலும் பெருமளவு தமிழ் அரசியல் கைதிகள் உண்ணாவிரதத்தில்..!!

விசாரணை செய் அல்லது விடுதலை செய் என்ற கோரிக்கையை முன்வைத்து நாட்டின் பல்வேறு சிறைச்சாலைகளிலும் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் குதித்துள்ள தமிழ் அரசியல் கைதிகளில் மேலும் 04பேர் மயக்கமடைந்த நிலையில் நேற்று வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். புதிய மகசீன் சிறைச்சாலைக் கைதிகள் இருவரும் யாழ்.சிறைச்சாலைக் கைதிகள் இருவருமே உடல்நிலை மோசமடைந்த நிலையில் நேற்று வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தங்கள்மீது ஏதாவது குற்றச்சாட்டுகள் இருப்பின் அது தொடர்பாக விசாரணை செய்யுங்கள் அல்லது விடுதலை செய்யுங்கள் என்ற கோரிக்கையை முன்வைத்து நாட்டின் பல்வேறு பகுதிகளிலுமுள்ள சிறைச்சாலைகளில் மிக நீண்டகாலமாக வாடும் 577தமிழ் அரசியல் கைதிகள் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் குதித்துள்ளனர். கொழும்பு விளக்கமறியல் சிறைச்சாலையில் 380பேரும் புதிய மகசீன் சிறைசாலையில் 98பேரும், அநுராதபுரம் சிறைச்சாலையில் 28பேரும், யாழ்ப்பாணத்தில் 24பேரும், மட்டக்களப்பில் 17பேரும், வெலிக்கடையில், கண்டியில் 24பேரும், 6பேருமென 577பேர் இந்த சாகும்வரை உண்ணாவிரதப்போராட்டத்தில் குதித்துள்ளனர். இதில் கொழும்பு விளக்கமறியல் கைதிகள் மற்றும் போகம்பரை சிறைச்சாலைக் கைதிகளை விட ஏனைய சிறைச்சாலைக் கைதிகள் கடந்த 5ம் திகதிமுதல் இந்தப் போராட்டத்தில் குதித்துள்ளனர். இதில் யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் ஏற்கனவே 3கைதிகள் மயக்கமடைந்து யாழ். வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் நேற்று மேலும் இருவர் மயக்கமடைந்து ஆபத்தான நிலையில் யாழ். வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். ஏனைய கைதிகளின் உடல்நிலையும் மோசமடைந்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. எம்.பிரியந்தன், எஸ்.நாதன் ஆகியோரே மயக்கமுற்ற நிலையில் யாழ். வைத்திசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதேநேரம் மகசீன் சிறைச்சாலையில் உண்ணாவிரதமிருப்போரில் இருவர் நேற்று முன்தினம் மயக்கமடைந்த நிலையில் சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களது உடல் நிலையும் மோசமடைந்துள்ளது. எஸ்.சிறிதரன் (45 வயது அராலி) மற்றும் யோ.சுதர்சன் (30 வயது யாழ்நகர்) ஆகியோரே மயக்கமுற்ற நிலையில் சிறைச்சாலை ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஏற்கனவே இந்தச் சிறைச்சாலையில் இருகைதிகள் மயக்கமுற்று சிறைச்சாலை ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கைதிகள் விடயத்தில் உடனடிக் கவனம் செலுத்தாவிடின் சாகும்வரை உண்ணாவிரதமிருப்போரின் நிலை மிக மோசமடையலாமென சிறைச்சாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இதேவேளை கண்டி, போகம்பரைச் சிறைச்சாலையில் உள்ள 47தமிழ் அரசியல் கைதிகளில் 24பேர் நேற்று சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர். இந்நிலையில் நேற்றுமுற்பகல் புதிய மகசீன் சிறைச்சாலைக்குச் சென்ற சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் மேஜர்ஜெனரல் ஆர்.டி.சில்வா கைதிகளின் உண்ணாவிரதத்தைக் கைவிடச் செய்ய பலத்த முயற்சிகளை மேற்கொண்டபோதும் அது வெற்றியளிக்கவில்லை. மிக நீண்டநேரம் தமிழ்க் கைதிகளுடன் உரையாடிய அவர், சட்டமா அதிபருடன் ஆலோசித்து விசாரணை அல்லது விடுதலைக்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார். எனினும் ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் உரியபதில் கிடைக்காவிட்டால் தங்கள் போராட்டம் தொடருமெனத் தமிழ்க் கைதிகள் தெரிவித்து தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக