கொழும்பு மகஸின் சிறைச்சாலை அரசியல்கைதிகள் தம்மை விடுதலை செய்யக்கோரி கடந்த 9 நாள்களாக மேற்கொண்டு வந்த உண்ணாவிரதப் போராட்டத்தை மன்னார் மறைமாவட்ட ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டைகையின் வேண்டுதலை அடுத்து நேற்றுக் கைவிட்டனர். நேற்று முன்தினம் ஜனாதிபதி, நீதிமற்றும் சட்ட மறுசீரமைப்பு அமைச்சர் ஆகியோரின் வேண்டுகோளிற்கமைய மன்னார் மறை மாவட்ட ஆயர், நீதியமைச்சின் ஆலோசகர், சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம், புதிய மகஸின் சிறைச்சாலை அத்தியட்சகர் ஆகியோர் மகஸின் சிறைச்சாலைக்குச் சென்று கைதிகளுடன் கலந்துரையாடினர்.இதன் போது மன்னார் மறைமாவட்ட ஆயர் கைதிகள் விடயத்தில் மிகவிரைவில் நடவடிக்கை எடுப்பதாக கூறியதுடன் உண்ணாவிரதத்தைக் கைவிடுமாறும் கேட்டுக்கொண்டார். எனினும் சிறைக்கைதிகள் ஜனாதிபதி மற்றும் அமைச்சரிடம் இருந்து தமக்கு உறுதி மொழி வழங்கப்பட்டாலேயே உண்ணாவிரதத்தை கைவிடுவோம் எனத்தெரிவித்தனர். நேற்று ஜனாதிபதியின் உறுதிமொழி கிடைத்ததைத் தொடர்ந்து பிற்பகல் 2.30மணிக்கு தாம் உண்ணாவிரதத்தைக் கைவிட்டுள்ளதாகவும் மகஸின் சிறைச்சாலைக் கைதிகள் சார்பில் தெரிவிக்கப்பட்டது.
இதே வேளை சாகும் வரை உண்ணாவிரதப்போராட்டத்தில் ஈடுபட்டிருந்த தமிழ் கைதிகளில் பெரும்பாலானவர்கள் தமது உண்ணாவிரதப் போரட்டத்தை கைவிட்டுள்ளதாக சிறைச்சாலை ஆணையாளர் நாயகம் டி.ஆர்.டி.சில்வா தெரிவித்தார். மகஸின் சிறைச்சாலையில் உள்ள சுமார் 74கைதிகள் மாத்திரம் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுவருவதாகவும் அவர்களும் தமது போராட்டத்தை கைவிடத்தயாராகி வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
நாடுபூராகவும் 750 தமிழ்க் கைதிகள் அவசரகாலச் சட்டத்தின் கீழ் கைதாகி தடுத்துவைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 670 பேர் சந்தேகத்தின் பேரில் கைதானவர்களாவர். இவர்களுக்கு எதிராக வழக்குகளை துரிதப்படுத்தவோ விடுவிக்கவோ சட்டமா அதிபர் நடவடிக்கை எடுத்து வருகின்றார் எனவே ஒரு சில அரசியல் கட்சிகளின் தூண்டுதல்களுக்காக உண்ணாவிரதப் போராட்டத்தில் குதிப்பதில் எதுவித பயனும் ஏற்படாது எனவும் ஆணையாளர் நாயகம் கூறினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக