சனி, 9 ஜனவரி, 2010

பிரபாகரனின் தந்தை வேலுப்பிள்ளையின் உடல் நாளை தகனம் - தாயார் பார்வதியும் விடுவிப்பு..!!

விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் தந்தை, திருவேங்கடம் வேலுப் பிள்ளையின் உடல், தமிழ் தேசியக் கூட்டமைப்பு எம்.பி. சிவாஜி லிங்கத்திடம் ஒப்படைக்கப் பட்டுள்ளது. அவர் உடலை எடுத்துக் கொண்டு வல்வெட்டித்துறை சென்றுள்ளார். அங்கு நாளை உடல் தகனம் நடைபெறுகிறது. அதேபோல பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாளும் ராணுவக் காவலிலிருந்து விடுவிக்கப்பட்டிருப்பதாக சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். அமரர் வேலுப்பிள்ளையின் உடல் வல்வெட்டித்துறை, தீருவில் பகுதியில், பூச்சிவிட்டான் என்னும் இடத்தில் அமைந்துள்ள அவரது உறவினர் ஒருவரின் வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்படும். பின்னர் ஊரணி மைதானத்திற்குக் கொண்டு செல்லப்பட்டு நாளை முற்பகல் உடல் தகனம் நடைபெறும். இன்று சனிக்கிழமை பகல் முதல் மக்கள் அஞ்சலி செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. முன்னதாக உடலைப் பெற்றுக் கொண்ட சிவாஜிலிங்கம் கூறுகையில், வவுனியாவிற்கு வேலுப்பிள்ளை அவர்களிடன் உடல் தாங்கிய பேழையை எடுத்துச்சென்றுள்ளதாகவும், இன்று காலை வல்வெட்டித்துறைக்கு எடுத்துச் செல்லப்படும். பனாங்கொட முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த வேலுப்பிள்ளை அவர்களின் துணைவியார் பார்வதி அம்மாளையும் ராணுவக் காவலில் இருந்து விடுவித்து யாழ்ப்பாணத்துக்கு கூட்டி செல்வதாகவும் கூறியிருந்தார். தனது தந்தையாரின் உடலை சிவாஜிலிங்கத்திடம் ஒப்படைக்க வேண்டும் என்று கனடாவில் உள்ள வேலுப்பிள்ளையின் மகள் கோரிக்கை விடுத்திருந்தார் என்பது நினைவிருக்கலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக