செவ்வாய், 29 டிசம்பர், 2009

தண்ணீர் குடிப்பதற்குக் கூட இந்திய அதிகாரிகள் சந்தர்ப்பம் வழங்கவில்லை -சிவாஜிலிங்கம் எம்.பி விசனம்..!!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினரும், சுயாதீன ஜனாதிபதி வேட்பாளருமான எம்.கே. சிவாஜிலிங்கத்திற்கு இந்தியாவிற்குள் பிரவேசிக்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. சிவாஜிலிங்கத்தை இந்திய அதிகாரிகள் விமான நிலையத்திலேயே திருப்பி அனுப்பி வைத்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. பழ.நெடுமாறனினால் தஞ்சாவூரில் நடத்தத் திட்டமிடப்பட்டிருந்த ஈழமக்கள் வாழ்வுரிமை என்ற தொனிப்பொருளிலான கூட்டமொன்றில் கலந்து கொள்ளும் நோக்கில் சிவாஜிலிங்கம் இந்தியா செல்ல முயற்சித்தார். எம்.கே.சிவாஜிலிங்கம் கடந்த சனிக்கிழமை லண்டனிலிருந்து டுபாய் வழியாக இந்தியாவிற்கு சென்றதாகவும், விமான நிலையத்தில் வைத்தே அவர் நாடு கடத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது. எமிரேட்ஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான ஈ.கே.542 விமானத்தின் ஊடாக 3.00மணியளவில் சென்னை விமான நிலையத்தைச் சென்றடைந்த சிவாஜிலிங்கம் 3.30அளவில் மீண்டும் திருப்பி அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். என்ன காரணத்திற்காக தம்மை நாடு கடத்துவதாக இந்திய அதிகாரிகள் அறிவிக்கவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். தண்ணீர் குடிப்பதற்குக் கூட இந்திய அதிகாரிகள் சந்தர்ப்பம் வழங்கவில்லை. மிகவும் கடுமையான முறையில் நடந்து கொண்டனர். இராஜதந்திர கடவுச் சீட்டையுடைய ஓரு நாட்டின் பாராளுமன்ற உறுப்பினரான என்னை நடத்தியவிதம் அருவருக்கத்தக்க வகையில் அமையப் பெற்றது. இந்தியா உள்ளிட்ட சர்வதேச நாடுகளுக்கு எதிராக தாம் வெளியிட்ட கருத்தினை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சகாக்கள் எவரேனும் இந்தியாவிடம் அறிவித்திருக்க வேண்டும் என சந்தேகிக்கிறேன் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக