செவ்வாய், 29 டிசம்பர், 2009
வன்னி பகுதியில் ஏராளமான கண்ணி வெடிகள் : தமிழர்களை குடியமர்த்துவதில் தாமதம்..!!
பெரியதம்பணை : அடர்ந்த காட்டுக்குள் கண்டறியப்பட முடியாத நிலையில், புலிகள் கண்ணிவெடிகளை புதைத்து வைத்திருப்பதால், அவைகளை அகற்றுவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. இதனால், இந்த பகுதிகளில் தமிழர்களை மீண்டும் குடியமர்த்துவதில், காலதாமதம் ஏற்படும், என ராணுவ முன்னாள் அதிகாரி தெரிவித்துள்ளார்.இலங்கையில், புலிகளுடனான சண்டை கடந்த மே மாதம் முடிவுக்கு வந்தது. சண்டையின் காரணமாக, குடிபெயர்ந்த தமிழர்கள் தனியாக முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர். அவர்களைக் குடியமர்த்துவதாக அரசு அறிவித்த போதும் இன்னும் ஒரு லட்சம் பேர் தங்கள் சொந்த வீடுகளுக்கு திரும்பமுடியவில்லை. வரும் ஜனவரி மாத இறுதியில் இவர்களை அவர்களது சொந்த இடங்களில் குடியமர்த்த இலங்கை அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.ஆனால், புலிகள் தங்கள் கட்டு பாட்டில் இருந்த பகுதிகளில் ஏராளமான கண்ணிவெடிகளை புதைத்து வைத்துள்ளனர். அடர்ந்த காட்டுக்குள் இந்த கண்ணி வெடிகள் புதைக் கப்பட்டுள்ளதால், இவற்றை அகற்றுவதில் காலதாமதம் ஆகும், என கண்ணிவெடிகளை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ள இந்திய ராணுவ முன்னாள் அதிகாரி மேஜர் கே.ராஜு தெரிவித்துள்ளார்.சுவிட்சர்லாந்து நிறுவனத்தின் சார்பில் வவுனியா மாவட்டத்தில் கண்ணிவெடிகளை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ள ராஜு இது குறித்து, கூறியதாவது: புலிகள் கடந்த காலங்களில் 15 லட்சம் கண்ணி வெடிகளை புதைத்து வைத்துள்ளதாக கூறுகின்றனர். சாதாரணமாக கண்ணிவெடிகள் நிலத்தடியில் 10 செ.மீ.,ஆழத்தில் புதைக்கப்படும். ஆனால், புலிகள் 13 செ.மீ.,ஆழத்தில் கண்ணி வெடிகளை புதைத்து வைத்துள்ளனர். எங்கள் குழு இந்த ஆண்டில் கடந்த மாதம் வரை ஆயிரம் கண்ணி வெடிகளை அகற்றியுள்ளது.ஒரு சதுர மீட்டர் பரப்பளவில் கண்ணி வெடியை அகற்றுவதற்கு 150 ரூபாய் செலவாகிறது. ஆறு குழுக்கள் தற்போது கண்ணிவெடிகளை அகற்றும் வேலையில் ஈடுபட்டுள்ளன.கைகள் மூலம் கண்ணிவெடிகளை அகற்றினால், ஒரு நாளைக்கு 15 முதல் 20 சதுர மீட்டர் பரப்பளவில் உள்ள கண்ணி வெடிகளை தான் அகற்ற முடியும்.குரோசியா,ஸ்லோவேகியா ஆகிய நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட அதி நவீன கருவிகளை கொண்டு ஒரு நாளைக்கு 5,000 முதல் 7,000 சதுர மீட்டர் பரப்பளவில் உள்ள கண்ணிவெடிகளை அகற்ற முடியும்.வன்னி பகுதியில் மக்கள் மீண்டும் குடியேற்றப்பட்டாலும், அவர்கள் கண்ணிவெடிகள் இல்லாத பாதுகாப்பான வழியாக செல்லும் படி அறிவுறுத்த வேண்டிய நிலை உள்ளது. தமிழ் மக்கள் அவர்களது பகுதியில் குடியேறினால், ஒரு சில இடங்களில் அகற்றப்படாத கண்ணி வெடிகளை கண்டால், அதை எப்படி கையாள வேண்டும், என்ற விழிப்புணர்வும் ஏற்படுத்த வேண்டிய நிலை உள்ளது.ஒரு சில இடங்களில் கொத்து கொத்தாக கண்ணிவெடிகள் புதைக்கப்பட்டுள்ளன. கடந்த ஏழாண்டுகளாக, கண்ணி வெடிகளை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளேன். 2002ம் ஆண்டு முதல் இரண்டு லட்சம் சதுர மீட்டர் பரப்பளவில், 4,500 கண்ணிவெடிகள் இதுவரை அகற்றப்பட்டுள்ளன.இவ்வாறு ராஜு கூறினார்.இதனிடையே, "ஜெய்ப்பூர் கால்' என்று அழைக்கப்படும் ஊனமுற்றோருக்கு உதவும் செயற்கைக் கால்கள் 600 இதுவரை பாதிக்கப்பட்ட பகுதிகளில் வினியோகிக்கப்பட்டிருக்கின்றன. இம்மாதிரி செயற்கைக் கால்கள் இந்திய அரசு உதவியுடன் தயாரித்துத் தர யாழ்ப்பாணத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. செயற்கைக்கால் ஒன்றின் விலை 2,000 ரூபாய் என்ற சலுகையில் தர, பகவான் மகாவீர் விகலாங் சகாயதா சமிதி என்ற ஜெய்ப்பூரைச் சார்ந்த அமைப்பு தருகிறது. ஒருமாத காலமாக, இங்கே டாக்டர்கள் குழு தங்கி, பாதிக்கப்பட்டவர்கள் கால்களை அளந்து, அதற்கேற்ப செயற்கைக் கால் தயாரித்து தருகின்றனர். இந்த ரகக் கால்களை பொருத்திக் கொள்பவர்கள், எளிதாக நடக்க மட்டும் அல்ல, சைக்கிளும் ஓட்டலாம்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக