திங்கள், 30 நவம்பர், 2009

பிரபாகரன் பெற்றோரை ஏற்க தயார்-புலிகளும் எனக்கு நிதியுதவி செய்யலாம்: பொன்சேகா..


இலங்கையில் ஜனநாயகத்தை நிலை நாட்டுவதற்காக எனக்கு ஆதரவாக விடுதலைப் புலிகளும் பிரசாரத்தில் ஈடுபடலாம். பிரபாகரனின் பெற்றோரை ஏற்கவும் நான் தயாராகவே இருக்கிறேன் என்று கூறியுள்ளார் சரத் பொன்சேகா. இலங்கை அதிபர் தேர்தலில் போட்டியிடுகிறார் பொன்சேகா. அரசியல்வாதியாகி விட்டதால் அதிரடியாகவும் பேசப் பழகி விட்டார். கிட்டத்தட்ட நம்ம ஊர் அரசியல்வாதிகளைப் போல அள்ளி விட்டு பேச ஆரம்பித்துள்ளார். கொழும்பில் அவர் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், தேர்தலில் வெற்றி பெறுவதற்காக எந்த ஒரு நபரும் எனக்கு ஆதரவளிப்பாராயின் அவர்கள் எனது கொள்கைக்காக செயற்படுகின்றனர் என்பதாகும். எனது கொள்கை முன் வைக்கப்பட்டுள்ளது. புலிகளுடன் இருந்தவர்களாக இருந்தாலென்ன பிரபாகரனின் பெற்றோர்களானால் என்ன இந்த பிரசாரத்திற்கு ஆதரவளிப்பார்களாயின் அதனை ஏற்றுக்கொள்வேன். தேர்தல் பிரசார நடவடிக்கைகளுக்கென பெருந்தொகை நிதி தேவைப்படும். எனது ஓய்வூதிய தொகையான 50 ஆயிரம் ரூபாயில் அதனை செய்யமுடியாது. அலுவலகங்கள் அமைத்து கூட்டங்களை நடத்தவேண்டும். இளைஞர், இளம் பெண்கள் எனக்கு ஒத்துழைப்பு நல்குவார்கள். எனது கொள்கையை ஏற்று முன்னாள் புலி உறுப்பினர்கள் எனக்கு ஆதரவாக பிரசாரங்களை முன்னெடுப்பதற்கு முன்வந்தால் அதனை இன்முகத்துடன் வரவேற்பேன். யாழ்ப்பாணத்திலும் என்னால் முடிந்த மட்டில் நான் பிரசாரம் செய்வேன். பாதுகாப்பு இருந்தால் எங்கு வேண்டுமானாலும் சென்று பிரசாரங்களை முன்னெடுப்பேன். தேர்தல் பிரசாரத்துக்காக புலிகள் இயக்க தலைவர் பிரபாகரனின் பெற்றோர்கள் என்னிடம் வந்து சேர்ந்தாலும் அவர்களை வரவேற்பேன் என்றார் பொன்சேகா. ராணுவம்தான் பிரபாகரனின் பெற்றோரைப் பிடித்து அடைத்து வைத்துள்ளது. அவர்கள் தற்போது எங்கு இருக்கிறார்கள் என்றே தெரியவில்லை. அப்படி இருந்தும், பிரபாகரனின் பெற்றோர் வந்தாலும் ஏற்பேன் என்று கூறியிருப்பதே பலே அரசியல்தனமான பேச்சு என்பதில் சந்தேகம் இல்லை.
அதேபோல, முகாம்களில் ஆயிரக்கணக்கான விடுதலைப்புலிகள் இருக்கின்றார்கள் என்று கூறியிருந்தீர்கள். இந்நிலையில் அம்மக்கள் துன்பப்படுவதாக நீங்களே கூறுகின்றீர்களே என்ற கேள்விக்கு அவர் பதிலளிக்கையில்,
அச்சுறுத்தல் இருக்குமென்று அரசாங்கம் ஏற்றுக்கொண்டால், லாரிகளில் ஆயிரக்கணகக்கானோரை ஏற்றிக் கொண்டு காடுகளில் கண்ணிவெடிகள் அகற்றப்படாத இடங்களில் கிராமங்களில் எவ்விதமான உட்கட்டமைப்பு வசதிகளும் செய்துகொடுக்காத இடங்களில் மக்களை குடியமர்த்த வேண்டிய அவசியமில்லை.
ஒரே நாளில் மக்களை குடியமர்த்தவேண்டும் என்று நான் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் கூறவில்லை. தேவையான பாதுகாப்பை உறுதிசெய்து கொண்டு கண்ணிவெடிகளை அகற்றி உட்கட்டமைப்பு வசதிகளை செய்து கொடுத்தே மக்கள் குடியமர்த்தப்பட வேண்டும். அரசியல் இலாபத்தை தேடிக்கொள்ளாமல் மக்களின் தேவை, பாதுகாப்பை உணர்ந்து செயற்படவேண்டும்.
பயங்கரவாதிகள் இருப்பார்களாயின் அவர்களை கைது செய்து சட்டத்தின் பிரகாரம் அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவேண்டும். பயங்கரவாதம் மீண்டும் தலைதூக்குவதற்கு இடமளிக்கக்கூடாது. தொழிலில் இருந்தபோது நான் இதனையே வலியுறுத்தினேன். தற்போதும் வலியுறுத்துகின்றேன். இவ்விஷயத்தில் என் இதயத்தில் அழுக்கில்லை என்றார்.
30 வருடங்களாக புலிகளுக்கு எதிரான போரை முடிக்க முடியாமல் ராணுவம் தடுமாறியதற்கு என்ன காரண் என்ற கேள்விக்கு, எமது பிழையை மற்றொரு தரப்பின் மீது சுமத்துவதற்கு விரும்பவில்லை. எம்மில் பிரச்சினைகள் இருந்தன. பெரும் தவறுகளை இழைத்துள்ளோம்.
உதாரணமாக யாழ்ப்பாணத்தை கைப்பற்றுவதற்கு திட்டமிட்டு கிழக்கை இழந்தோம், முல்லைத்தீவை கைப்பற்றுவதற்காக யாழ்ப்பாணத்தை இழந்தோம்.
கிளிநொச்சியை கைப்பற்றுவதற்காக ஆனையிறவையும் மாங்குளத்தையும் இழந்தோம். இவ்வாறு பல்வேறு இழப்புகள் ஏற்பட்டன.
சில தருணங்களில் தவறான வழிநடத்தலினால் பின்னடைவுகளை சந்தித்தோம். அதனை ஏற்றுக்கொண்டோம். ராணுவத்தின் முன்னாள் அதிகாரியான என்னை பொறுத்தமட்டில் ராணுவத்தின் பின்னடைவும் இதற்கு காரணமாகவிருந்தது என்றார்.
அன்று சிறுபான்மை இனங்களை பற்றி தவறாக கருத்து தெரிவித்திருந்தீர்களே என்ற கேள்விக்கு,
நான் கூறியதை ஊடகவியலாளர் பிழையாக விளங்கிக்கொண்டு விட்டார். இந்த நாட்டை சிங்களவர்கள் ஆட்சி செய்ததாக வரலாறுகள் தெரிவிக்கின்றன. நான் வரலாற்று ஆய்வாளர் அல்ல. சிறுபான்மை இனத்தையும் இணைத்துக் கொண்டு செல்லவேண்டும் என்று கூறியிருந்தேன். அத்துடன் அரசியலமைப்பில் இது தொடர்பில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளன.
சிங்கள பௌத்தனாகிய நான் சகல மதங்கள், மொழிகள் இனங்களின் கலாசாரத்தை மதிக்கின்றேன் என்றார்.
புலி என்று கூறி தமிழர்களை விரட்டி விரட்டி வேட்டையாடிய பொன்சேகா, இப்போது புலியாக இருந்தால் என்ன, யாராக இருந்தால் என்ன எனக்கு வெற்றி கிடைக்கும் என்று தெரிந்தால் யார் ஆதரவை வேண்டுமானாலும் ஏற்கத் தயங்க மாட்டேன் என்று பச்சையாக பேசியிருப்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக