வெள்ளி, 13 நவம்பர், 2009
புளொட்டின் பிரான்ஸ் கிளை அமைப்பாளர் பிரபாவின் இறுதி நிகழ்வுகள் நேற்று..
கடந்த 30.10.2009அன்று பிரான்ஸில் அகாலமரணமான தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) பிரான்ஸ் கிளை அமைப்பாளர் பிரபாவிற்கு (இராஜமனோகரன் பிரபாகரன்) இறுதி அஞ்சலி நிகழ்வுகளும் இறுதிக் கிரியைகளும் நேற்றையதினம் பிரான்ஸில் நடைபெற்றன. ஆரம்ப நிகழ்வாக தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் கொடியானது கழகத் தோழர்களான சாலிரவி (பிரான்ஸ்), சுகுமார் (பிரான்ஸ்), யூட் (ஜேர்மன்), அப்பன் (ஜேர்மன்) ஆகியோரினால் தோழர் பிரபாவின் பூதவுடல்மீது போர்க்கப்பட்டு கழக மரியாதையும் செலுத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து அஞ்சலிக் கூட்டம் ஆரம்பமானது. புளொட் தோழர்கள், ஈ.பி.ஆர்.எல்.எவ், ஈ.பி.டி.பி அமைப்புக்களின் தோழர்கள், தமிழர் விடுதலைக் கூட்டணி முக்கியஸ்தர்கள் ஆகியோர் அஞ்சலி உரையாற்றினார்கள். முதலில் புளொட்டின் பிரான்ஸ் கிளையைச் சேர்ந்த தோழர் ஜோன்சன் அஞ்சலி உரையை நிகழ்த்தி அஞ்சலி நிகழ்வினை ஆரம்பித்து வைத்தார். பின்னர் தோழர் பிரபாவின் சகோதரராகிய கருணாமூர்த்தி அஞ்சலி உரையினை ஆற்றினார். இதனைத் தொடர்ந்து புளொட் அமைப்பின் சார்பில் ராஜன் (நோர்வே), குமார் (சுவிஸ்), சிவபாலன் (லண்டன்) ஆகியோரும் உரையாற்றினார்கள். ஈ.பி.ஆர்.எல்.எவ் இன் பிரான்ஸ் கிளை சார்பில் யோகராஜாவும், ஈ.பி.டி.பியின் பிரான்ஸ் கிளை சார்பில் ஆறுமுகமும், டன்ரிவி மற்றும் ரி.ஆர்.ரி தமிழலையின் சார்பில் வீரா, இன்டினாகபே சார்பில் செல்வாவும், தமிழர் விடுதலைக் கூட்டணியின் பிரான்ஸ் கிளை சார்பில் உதயகுமாரும் தொடர்ந்து உரையாற்றினார்கள். நன்றியுரையை பிரபாவின் சகோதரர் முறையான ராமகிருஸ்ணன் ஆற்றினார். இதனைத் தொடர்ந்து இறுதிச் சடங்குகள் இடம்பெற்று தோழர் பிரபாவின் வித்துடல் தீயில் சங்கமமானது. (தகவல்.. ஊடகப்பிரிவு -புளொட் பிரான்ஸ் கிளை)
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக