திங்கள், 23 நவம்பர், 2009

சுவிற்சர்லாந்து மாநாடு என்ன முடிவினை எட்டியது?

சுவிற்சாலாந்தில் நடைபெற்றுவரும் இலங்கையின் தமிழ், முஸ்லீம், மலையக தமிழ்கட்சிகளின் மாநாட்டுக்கு ஊடகவியலாளர்களோ வெளிநபர்களோ அனுமதிக்கப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்ட நிலையில், புலிகள் சார்பு இணையத்தளம் ஒன்று மாநாட்டில் கலந்து கொண்ட கட்சிகளின் தலைவர்கள், முக்கியஸ்தர்கள் தொடர்பான புகைப்படங்களை வெளியிட்டுள்ளது.

பிரித்தானிய தமிழ் தகவல் நிலையத்தின் ஏற்பாட்டில் சுவிற்சர்லாந்தின் பிறவுன்பீல்ட் மாநிலத்தின் பிரசித்திபெற்ற றைன் நதிக்கரையோரத்தில் அமைந்துள்ள விடுதியொன்றில் இடம்பெறும் மேற்படி சந்திப்பில் என்ன விடயங்களில் இணக்கப்பாடு காணப்பட்டுள்ளன என்ன விடயங்களில் முரன்பாடு காணப்பட்டன என்பது குறித்த செய்திகள் எதுவும் வெளிவராமல் மிகவும் இரகசியமாக மாநாடு நடைபெற்றுவரும் நிலையில், மேற்படி படங்கள் மாத்திரம் எவ்வாறு புலிகளின் இணையத்தளங்களிற்கு கிடைத்தது என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

இவ் மாநாட்டில் புலிகளை ஆதரித்த தமிழ்கூட்டமைப்பு, அரசை ஆதரிக்கும் ஈ.பி.டி.பி. மற்றும் மலையக கட்சிகள், எதிர்கட்சியான ஜ.தே.க.யுடன் இணைந்து செயலாற்றிவரும் முஸ்லீம் காங்கிரஸ், மேலக மக்கள் முன்னணி, அரசையும் சாராமல் புலிகளையும் சாராமல் சிறுபான்மை கட்சிகளாக செயல்படும் த.வி.கூ, புளொட், ஈ.பி.ஆர்.எல்.எவ்(நாபா), கிழக்கு முதலமைச்சர் தலைமையிலான ரி.எம்.வி.பி. என்று எதிரும் புதிருமாக கடந்த காலங்களில் செயற்பட்டுவரும் கட்சிகள் ஒருமித்து சந்திப்பதே வரவேற்க்கதக்கதாகும். தமிழ்மக்களின் நலன்குறித்து இவ் கட்சிகள் குறைந்தபட்ச இணக்கப்பாட்டிற்கு வந்தாலே அது தமிழ்மக்களுக்கு கிடைத்த வெற்றியாகும், இவர்கள் இணக்கப்பாட்டினை கண்டார்களா இல்லை இங்கேயும் குத்துவெட்டுத்தானா? ஏன்பதையெல்லாம் அவர்களின் கூட்டறிக்கை வெளிவரும்வரை பொறுத்திருப்போம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக