புதன், 14 அக்டோபர், 2009

வவுனியா தமிழ் மகாவித்தியாலயத்தில் கல்வி பயிலும் ஈ.பி.டி.பியின் மாணவர் அமைப்பைச் சேர்ந்த மாணவர்கள் சக மாணவர்கள் மீது தாக்குதல்.

ஈ.பி.டி.பியின் மாணவர் அமைப்பைச் சேர்ந்த மாணவர்கள் கப்பம்கோரி சக மாணவர்களைத் தாக்கிய சம்பவத்தில் இருவர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்- வவுனியா தமிழ் மகாவித்தியாலயத்தில் கல்வி பயிலும் ஈ.பி.டி.பியின் மாணவர் அமைப்பைச் சேர்ந்த மாணவர்கள் அப்பாடசாலையில் க.பொ.த உயர்தரம், கணிதப் பிரிவில் பயிலும் சக மாணவர்கள் இருவரிடம் கப்பம் கேட்டு அச்சுறுத்தியுள்ளனர். இதன்போது கப்பம் வழங்கப்படாத நிலையில் அவர்கள்மீது கடுமையான தாக்குதல்களை நடத்தியுள்ளனர். இந்நிலையில் கடும் காயங்களுக்குள்ளான இரு மாணவர்களும் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். ஈ.பி.டி.பியின் மாணவர் அமைப்பைச் சேர்ந்தவர்களான றமணி, ரஜீவன், நிரோசன் சதீஸ், டினேஸ் உள்ளிட்ட ஆறுபேரே கப்பம் கோரி குறித்த இரு மாணவர்கள்மீதும் தாக்குதல்களை நடத்தியுள்ளனர். இந்நடவடிக்கைக்கு ஈ.பி.டி.பி அமைப்பைச் சேர்ந்த காஸ்ரோ என்பவரின் மகனே தலைமை வகித்துள்ளார். பாதிக்கப்பட்ட இரு மாணவர்கள் சார்பாக பொலீஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ள போதிலும் தாக்குதலை மேற்கொண்ட மாணவர்கள் அரசியல் கட்சியினைச் சார்ந்திருப்பதால் பொலீசார் இவ்விடயத்தில் அசமந்தப் போக்கினைக் கடைப்பிடித்து வருகின்றனர். இவ்வாறான சம்பவங்கள் தொடர்ச்சியாக நடைபெறும் விடயமாக மாறிவிட்டதென்று பொதுமக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக