புதன், 10 நவம்பர், 2010
புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் புலி உறுப்பினர்களுக்கு சுதந்திர நடமாட்டம் இல்லை..!
புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் புலிகள் அமைப்பின் போராளிகளின் சுதந்திரமான நடமாட்டம் தொடர்பில் அமைச்சர்களும், அதிகாரிகளும் வௌ;வேறான கருத்துக்களைத் தெரிவிக்கின்றனர். முன்னாள் போராளிகளை சமூகத்தில் எவ்வாறு இணைத்துக் கொள்வது என்பது தொடர்பில் பொதுமக்களுக்கும் அரச அதிகாரிகளுக்கு மதத் தலைவர்களுக்கும் இராணுவம் பாடம்நடத்தி வருகையில் இந்த முரண்பாடு வெளிவந்துள்ளது. புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுதலை செய்யப்படும் முன்னாள் போராளிகள் விடுவிக்கப்பட்ட பின்னர் சமூகத்தில் சுதந்திரமாக வாழ முடியும் என்றும் இவர்களுக்கு எவரும் இடையூறு விளைவிக்க முடியாது என்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு மற்றும் புனர்வாழ்வு அமைச்சர் டியூ குணசேகர தெரிவித்துள்ளார். ஆனால், யாழ். நகரில் விடுவிக்கப்பட்ட முன்னாள் போராளிகள் நாளாந்தம் அல்லது வாராந்தம் அச்செழு, ஊரெழு இராணுவ முகாம்களில் கைச்சாத்திடவேண்டும் என இராணுவத்தினர் வற்புறுத்துகின்றனர் என புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் போராளிகளின் பெற்றோர்கள், உறவினர்கள் விசனம் தெரிவிக்கின்றனர். இந்நிலையில் இது தொடர்பாக புனர்வாழ்வு ஆணையாளர் பிரிகேடியர் சுசந்த ரணசிங்கவிடம் தொடர்புகொண்டு கேட்டபோது, புனர்வாழ்வளிக்கப்பட்டவர்கள் இரண்டு அல்லது மூன்று மாதங்களுக்கு இராணுவ முகாமில் கைச்சாத்திடவேண்டும். இது அவர்களின் நலன் கருதியே மேற்கொள்ளப்படுகின்றது. இறுதிக்கட்ட யுத்தத்தின்போது சரணடைந்த மற்றும் கைதுசெய்யப்பட்ட முன்னாள் போராளிகளுக்கு உரிய முறையில் புனர்வாழ்வளித்து அவர்களை விடுவித்தோம். எனினும், சமூகத்தில் அவர்களுக்குப் பிரச்சினைகள் இருக்கின்றன. அவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்திக்கொள்வதற்காகவே இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படுகின்றது. இரண்டு அல்லது மூன்று மாதங்களின் பின்னர் இந்நடவடிக்கை படிப்படியாகக் குறைக்கப்படும். எனினும், முன்னாள் போராளிகளுக்குத் தொழில்வாய்ப்பு எதுவும் கிட்டினால் பொலிஸ் சான்றிதழ் ஒன்றை பெற்றுக்கொண்டு அவர்கள் தொழிலுக்குச் செல்லமுடியும். இந்தப் பொலிஸ் சான்றிதழும் அவர்களின் பாதுகாப்புக் கருதியே வழங்கப்படும். முன்னாள் போராளிகளுக்கு புனர்வாழ்வளித்து அவர்களை விடுதலை செய்வது மட்டுமல்ல எமது கடமை. அவர்களை சமூகத்தில் நல்லதொரு நிலைக்குக் கொண்டுவரும் வரை கண்காணிப்பதே எமது நோக்கம். இதில் வேறு எந்த உள்நோக்கமும் இல்லை என்று கூறியுள்ளார். அதேவேளை, முன்னாள் போராளிகளை விடுவிக்கும்போதெல்லாம் அவர்கள் சமூகத்தில் இனி எதுவித தடையுமின்றி வாழலாம். அவர்களுக்கு எவரும் நிபந்தனைகளை விதிக்க முடியாது. அவ்வாறு விதித்தால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என நீங்கள் தெரிவித்தீர்கள். எனினும், தற்போது முகாம்களில் அவர்கள் கைச்சாத்திடவேண்டும் என்று நிபந்தனை போடுகின்றீர்களே என்று சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு மற்றும் புனர்வாழ்வு அமைச்சர் டியூ.குணசேகரவிடம் கேட்டபோது, இவ்வாறானதொரு நடவடிக்கை இடம்பெறவில்லை. அது குறித்து இன்னும் எனக்கு எவரும் அறிவிக்கவில்லை. அவ்வாறு இடம்பெற்றால் அது குறித்து கவனம் செலுத்தப்படும்என்றார். எது எப்படியிருப்பினும், இந்த நடவடிக்கையை அரசு மேற்கொள்வதன் மூலம் அவர்களை இச்சமூகத்தில் தீவிரவாத கண்ணோட்டத்துடனேயே அரசு இன்னும் பார்க்கின்றது என மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக