சனி, 3 அக்டோபர், 2009

கற்பழிப்புக்கள் இடம்பெற்றதாக தகவல்கள் இல்லை. எம்பி. சிவநாதன் கிசோர்.

ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபை அமர்வில் பேசிய அமெரிக்க ராஜாங்கத் திணைக்களத்தின் செயலர் ஹிலாரி கிளின்ரன், பல்கன், பர்மா, இலங்கை போன்ற நாடுகளில் யுத்தத்தில் கற்பழிப்பு ஆயுதமாக பயன்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். ஹிலாரி கிளின்ரனின் இக்கருத்து தொடர்பாக வவுனியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவநாதன் கிசோர் அவர்களிடம் தொடர்பு கொண்டு கேட்டபோது, வன்னியில் யுத்தம் இடம்பெற்றபோது நான் எனது மாவட்டத்தில் தங்கியிருந்து என்னால் முடிந்த சேவையை மக்களுக்கு வழங்கியிருக்கின்றேன். அவர்களுடைய குறைநிறைகளை நன்கு கேட்டறிந்துள்ளேன். வன்னியிலிருந்து வந்துள்ள மக்கள், புலிகள் தம்மை தடுத்து வைத்திருந்தார்கள், படையினர் தாறுமாக செல்களை வீசினார்கள், உயிர்களை இழந்தோம், ஊனமுற்றோம், உடமைகளை இழந்தோம் என பல தரப்பட்ட குறைகளைக் கூறினார்கள் ஆனால் கற்பழிப்புத் தொடர்பாக நான் அவர்களிடம் இருந்து எதுவும் கேள்விப்படவில்லை என கூறினார். கொங்கோ நாட்டின் கிழக்கு பிரந்தியத்தில் மாதமொன்றிற்கு 1100 கற்பழிப்புக்கள் இடம்பெறுவதாக பதிவுகள் உள்ளதாக ஹிலாரி கிளின்ரன் தெரிவித்துள்ளார். ஆனால் இலங்கையில் போர்கால வரலாற்றை எடுத்து நோக்கும் போது வடகிழக்கில் சில கற்பழிப்புச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதை மறுக்க முடியாது என்பதுடன் அவ்வாறன சம்பவங்களுடன் சம்பந்தப்பட்ட தரப்பினர் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு அவர்கள் தண்டிக்கப் பட்டிருக்கின்றார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக