புதன், 16 செப்டம்பர், 2009

ஹக்கீம் வருகைக்கு அக்கரைப்பற்றில் எதிர்ப்பு!


ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவர் ரவூப் ஹக்கீம் (பா.உ.) வருகைக்கு எதிர்ப்புத் தெரிவித்து அக்கரைப்பற்று பிரதேசத்தில் இன்று மேற்கொள்ளப்பட்டுள்ள எதிர்ப்பு நடவடிக்கை காரணமாக பிரதான வீதியூடாகப் போக்குவரத்துச் சேவைகள் ஸ்தம்பிதமடைந்துள்ளன.அக்கரைப்பற்றுப் பிரதேசத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ஸ்ரீ.ல.மு.காவின் ஸ்தாபகத் தலைவர் மர்ஹூம் எம்.எச்.எம். அஷ்ரப்பின் 9ஆவது ஆண்டு கத்தமுல் குர் ஆன் மற்றும் புனித ரமழான் இப்தார் ஆகிய நிகழ்வுகளில் கலந்து கொள்வதற்காக ரவூப் ஹக்கீம் இன்று மாலை அக்கரைப்பற்று செல்லவிருக்கின்றார்.
இவரது வருகைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அக்கரைப்பற்று நகர், தைக்கா நகர், பட்டியடிப்பிட்டி பாலம் ஆகிய இடங்களில் வீதியின் குறுக்கே டயர்கள் போட்டு எரிக்கப்பட்டுள்ளன. இதனால் அக்கரைப்பற்றுக்கும் கல்முனைக்குமிடையில் நண்பகல் வரை போக்குவரத்துத் தடைப்பட்டிருந்த போதிலும் பொலிசாரின் தலையீட்டினால் ஒருசில பஸ்கள் மட்டுமே சேவையில் ஈடுபட்டதைக் காணக் கூடியதாக இருந்தது.
அக்கரைப்பற்றுப் பிரதேசத்தில் போக்குவரத்து சேவைகள் பாதிக்கப்பட்டிருந்தாலும் ஏனைய அலுவல்கள் வழமை போல் நடைபெற்றன. ரவூப் ஹக்கீமுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் சில இடங்களில் கறுப்புக் கொடிகளும் பறக்கவிடப்பட்டிருந்தன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக