ஞாயிறு, 20 செப்டம்பர், 2009

ஒரு வாரம் கடந்தும் சொந்த மாவட்டங்களிலேயே முகாம் வாழ்க்கை

வவுனியா நிவாரணக் கிராமத்திலிருந்து மீள் குடியேற்றத்திற்காக அழைத்து வரப்பட்ட கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த இரண்டாவது தொகுதியினர் ஒரு வாரம் கடந்து விட்ட நிலையிலும் சொந்த மாவட்டங்களிலுள்ள இடைத்தங்கல் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.கடந்த வெள்ளிக்கிழமை வைபவ ரீதியாக விடுவிக்கப்பட்டு, சிவில் அதிகாரிகளினால் பொறுப்பேற்கப்பட்டு மறுநாள் சனிக்கிழமை சொந்த மாவட்டங்களுக்கு இவர்கள் அழைத்து வரப்பட்டிருந்தனர்.இக்குடும்பங்களில் மட்டக்களப்பு மாவட்டதைச் சேர்ந்த 72 குடும்பங்கள் (238 பேர்) சிங்கள மகா வித்தியாலயத்திலும்,45 குடும்பங்கள் (127 பேர்) குருக்கள் மடம் கலைவாணி வித்தியாலயத்திலும் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த 42 குடும்பங்கள் (130 பேர்) அக்கரைப்பற்று 4ஆம் கட்டையிலுள்ள பழைய நெல் சந்தைப்படுத்தும் களஞ்சியத்தில் தங்க வைக்கபபட்டு விசேட பாதுகாப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.திருகோணமலை மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் ஈச்சிலம்பற்றை, திருகோணமலை மற்றும் குச்சவெளி ஆகிய பிரதேசங்களிலுள்ள 4 பாடசாலைகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.சொந்த இடங்களில் மீள்குடியேற்றத்திற்கென அழைத்து வரப்பட்ட இவர்களிடமிருந்து பல்வேறு விபரங்களை பதிவு செய்ய வேண்டியிருப்பதால் இரண்டு நாட்களில் இருப்பிடங்களுக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள் என அமைச்சர் விநாயகமூர்த்தி முரளீதரன் உட்பட பலரும் அந்நேரம் தெரிவித்திருந்தனர். எனினும் தொடர்ந்தும் இவர்கள் முகாம்களிலேயே தங்க வைக்கப்பட்டுள்ளார்கள்.சில இடைத்தங்கல் முகாம்களில் உறவினர்கள் பார்வையிட அனுமதியளிக்கப்படுகின்றது. ஓரிரு இடைத்தங்கல் முகாம்களில் இதற்கான அனுமதி மறுக்கப்படுவதாகக் கூறப்படுகின்றது.அதே வேளை ஈச்சிலம்பற்று செண்பகா வித்தியாலயத்தில் தங்க வைக்கப்பட்டுள்ள குடும்பங்களைப் பார்வையிட நேற்று முதல் உறவினர்களுக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது.கிழக்கு மாகாணத்தில் மீள் குடியேற்றத்திற்கு என அழைத்து வரப்பட்ட இக்குடும்பங்களைப் பொறுத்தவரை சொந்த இடங்களுக்கு அனுப்பி வைப்பது குறித்து இது வரை ஒரு தீர்க்கமான முடிவும் வெளியாக நிலையே காணப்படுகின்றது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக