திங்கள், 9 மார்ச், 2015

இந்திய வீட்டுத் திட்டத்தில் முறைகேடுகளைக் களையக் கோரி ஜனாதிபதியிடம் மகஜர் கையளிப்பு!!



யுத்தத்தினால் பாதிப்புற்று பல்வேறு இடப்பெயர்வுகளைச் சந்தித்து பல்வேறு அழுத்தங்களின் மூலம் மீளக் குடியேறிய மக்களுக்கு தமது காணிகளில் சொந்தவீடு கட்டிக் கொண்டு வாழ்வாதாரத்தை மீளக்கட்டியெழுப்புவதற்காக இந்திய அரசு 50,000 வீடுகளைக் கட்டிக்கொடுக்க முன்வந்தது. ஆரம்பத்தில் இறுதியாக நடைபெற்ற யுத்தத்தில் பாதிக்கப்பட்டு மெனிக்பாம் இடைத்தங்கல் முகாமில் தங்கியுள்ள மக்களுக்கே அந்த வீடுகள் கட்டிக் கொடுக்கப்படும் என்றும் இந்திய அரசு அறிவித்திருந்தது.

இந்நிலையில், முந்தைய அரசு தனது ராஜதந்திர நடவடிக்கைகளின் மூலம் அதனை நாடு முழுவதிலுமுள்ள பகுதிகளுக்கும் பகிர்ந்தளிக்க இந்திய அரசை இணங்க வைத்தது. இதன் மூலம் இலங்கை அரசு வன்னி நிலப்பரப்பில் ஏற்பட்ட சேதத்தைக் குறைத்துக் காட்ட முயற்சித்தது. அவ்வாறு வழங்கப்பட்ட வீடுகளும் பாதிக்கப்பட்ட மக்களைச் சென்றடையாமல் அரசியல் தலையீடுகளின் மூலம் தடையேற்படுத்தப்பட்டுள்ளது.

வீட்டுத்திட்டத்தில் ஏற்பட்டுள்ள முறைகேடுகளையும் அநீதிகளையும் கண்டித்தும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நியாயம் வழங்கக் கோரியும் எதிர்வரும் 11.03.2015 புதன்கிழமையன்று காலை9.00 மணிக்கு மீளக்குடியமர்ந்தோர் நலன்பேணும் அமைப்பும் வவுனியா மாவட்ட பிரஜைகள் குழுவும் இணைந்து ஜனாதிபதிக்கும், பிரதமருக்கும் வவுனியா மாவட்ட அரசாங்க அதிபரினூடாக மகஜர் ஒன்றைக் கையளிக்க உள்ளனர்.

தமிழர்களுக்கான நீதியை வழங்கக்கோரியும் தமிழர்களின் ஒற்றுமையைக் காட்டுவதற்கும், பாதிப்புற்ற மக்களுக்கு ஆதரவு தெரிவித்தும் மேற்கொள்ளப்படுகின்ற இந்நிகழ்வில் வீட்டுத் திட்டம் கிடைக்காத அனைவரும் தவறாமல் பங்கேற்குமாறும், தமிழ் மக்கள் அனைவரும் ஓரணியில் திரண்டு ஆதரவு தெரிவிக்க வேண்டும் என்றும் வவுனியா மாவட்ட பிரஜைகள் குழு வேண்டுகோள் விடுக்கின்றது.

ஊடக அன்பர்கள், பொது அமைப்புகள், தொழிற்சங்கங்கள் என்று சமுதாயத்தின் சகல மட்டத்திலிருந்தும் அனைத்துவிதமான ஒத்துழைப்பையும் வவுனியா மாவட்ட பிரஜைகள் குழுவும் மீள்குடியமர்ந்தோர் நலன்பேணும் அமைப்பும் நாடி நிற்கின்றது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக