வியாழன், 12 பிப்ரவரி, 2015

ஐ.நா மனித உரிமைகள் அறிக்கை பிற்போட எதிர்பார்க்கும் இலங்கை வொஸிங்டனில் மங்கள தெரிவிப்பு..!!!

இலங்கை தொடர்பான ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் அறிக்கையை பல மாதங்களுக்கு பிற்போட தமது நாடு எதிர்பார்ப்பதாக வெளியுறவுத்துறை அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் வொஸிங்டனில் வைத்து இந்த கருத்தை அமைச்சர் மங்கள சமரவீர வெளியிட்டுள்ளதாக ரொயட்டர் தெரிவிக்கிறது.

இலங்கையின் புதிய அரசாங்கம் இந்த விடயத்தை கையாள்வதற்கு பொறிமுறை ஒன்றை அமைக்கும் வரையில் இந்த அறிக்கையை வெளியிடக்கூடாது என்று தமது நாடு எதிர்ப்பார்ப்பதாக அமைச்சர் குறிப்பிட்டார்.


கடந்த மார்ச் மாதம், மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட பிரேரணையின் கீழ் இலங்கைக்கு எதிராக சர்வதேச விசாரணைக்கு இணங்கப்பட்டது.

இதன்கீழ் விசாரணைகளும் நடத்தப்பட்டு அதன் அறிக்கையே எதிர்வரும் மார்ச் 25ஆம் திகதி பேரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

இந்தநிலையில் பேரவையின் அறிக்கை இறுதிப்படுத்தப்பட்டிருக்குமானால், தமது உள்நாட்டு பொறிமுறையையும் பேரவை பரிசீலிக்க முடியும் என்று மங்கள சமரவீர குறிப்பிட்டுள்ளார்.

எனவே ஆகஸ்ட் மாதம் வரைக்கும் இலங்கையின் உள்நாட்டு பொறிமுறை ஏற்படுத்துவதற்கான அவகாசத்தை பேரவை வழங்கும் என்று தாம் நம்புவதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை இலங்கை குறித்த அறிக்கையின் வெளியிடல் தாமதமாக்கப்படுமா? என்று ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேச்சாளர் ருபர்ட் கொல்விலியை ரொயட்டர் கேட்டபோது, அவர் கருத்து எதனையும் கூற மறுத்து விட்டார். எனினும் மார்ச் 25ஆம் திகதி அறிக்கையை வெளியிட தாம் அட்டவணையை தயாரித்துள்ளதாக கொல்விலி குறிப்பிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக