வெள்ளி, 16 ஜனவரி, 2015

இலங்கை கடலுணவுப் பொருட்களை கொள்வனவு செய்ய ஐரோப்பிய ஒன்றியம் தடை..!!

சட்டவிரோதமான முறையில் இலங்கையில் மேற்கொள்ளப்படும் மீன்பிடி நடவடிக்கைகளை நிறுத்துமாறு எச்சரிக்கை விடுத்தும் கணக்கிலெடுக்காததால் அதனை தண்டிக்கும் வகையில் ஐரோப்பிய ஒன்றியம்  வியாழக்கிழமை தொடக்கம் இலங்கையில் உற்பத்தி செய்யும் கடலணவுப் பொருட்களை கொள்வனவு செய்வதை தடை செய்துள்ளது.
குறிப்பாக, ஐரோப்பிய ஒன்றியத்தில் ஜெர்மனி, பிரான்ஸ், இத்தாலி, நெதர்லாந்து மற்றும் பிரிட்டன் ஆகிய நாடுகளே இலங்கையிலிருந்து மீன் இறக்குமதி செய்கின்ற முக்கிய நாடுகள்.

இந்நிலையில் இப்பிரச்சினைக்கு தீர்வு வழங்காவிடின், தமது நிறுவனத்தை இழுத்து மூட வேண்டிய நிலை ஏற்படும் என இலங்கை மீன் உற்பத்தி ஏற்றுமதி சங்கம் தெரிவித்துள்ளது.


ஐரோப்பிய ஒன்றியத்தின் தடையால் மீன் உற்பத்தி நிறுவனங்களின் செயற்பாடுகள் முடங்கிப்போயுள்ளதென இலங்கை மீன் உற்பத்தி ஏற்றுமதி சங்கத்தின் பேச்சாளர் சன்ன வீரதுங்க தெரிவித்தார்.

இதனால் வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்யப்படும் 1500 டொன் மீன் மாதாந்தம் உள்நாட்டு சந்தைக்கு மிகுதிப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்மூலம் உள்நாட்டு சந்தையில் மீன் விலை பாரிய வீழ்ச்சி அடையும்.

ஆனால் பிரச்சினை தீர்க்கப்படாவிட்டால் 90% ஏற்றுமதி நிறுவனங்கள் மூடப்படும் அபாயம் ஏற்படும் என சன்ன வீரதுங்க தெரிவித்தார்.

கடந்த ஒக்டோபர் மாதம் ஐரோப்பிய ஒன்றியத்தினால் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்ட போதும், அதனை தடுக்க இலங்கை அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருக்கவில்லை.

'இலங்கையின் மொத்த மீன் உற்பத்தியில் 34 வீதம் ஐரோப்பிய சந்தைக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. 38 வீதம் ஜப்பானுக்குத் தான் ஏற்றுமதி செய்யப்படுகிறது. எனினும் மாற்று சந்தைகளை நாங்கள் தேடியிருக்கின்றோம்' என்றும் கூறினார் ஹெட்டியாராச்சி.

'ரஷ்யா போன்ற நாடுகளுடன் இதற்காக பேச்சுநடத்தி மாற்றுவழியொன்றை கண்டுபிடித்திருக்கிறோம். எனினும் ஐரோப்பிய சந்தையை பாதுகாப்பதற்கான முயற்சிகளை நாங்கள் கைவிடவில்லை' என்றார் இலங்கையின் மீன்பிடித்துறையின் தலைமை இயக்குநர் நிமல் ஹெட்டியாராச்சி.

தற்போது அமுலாக்கப்பட்டுள்ள இந்த தடையினால் இலங்கைக்கு வருடாந்தம் 73 மில்லியன் யூரோக்கள் நட்டம் ஏற்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக