வெள்ளி, 7 நவம்பர், 2014

மகிந்தவுக்கு மூன்றாவது முறையாகவும் போட்டியிட முடியும் கசிந்த உயர்நீதிமன்றத்தின் இரகசியம்..!!

அடுத்த ஜனாதிபதித் தேர்தலை நடத்துவது சம்பந்தமாக உயர்நீதிமன்றத்தின் கருத்தை அறிவது தொடர்பான வாய்மொழி மூல வாதங்களை முன்வைத்து நிறைவடைந்துள்ளதாக உயர்நீதிமன்ற பதிவாளர் தெரிவித்துள்ளார்.
வாய்மொழி மூல வாதங்களை முன்வைக்கும் தேவை இருப்பதாக ஜே.வி.பியின் சட்டத்தரணியான மேல் மாகாண சபை உறுப்பினர் சுனில் வட்டகல இன்று நீதிமன்றத்தில் பகிரங்க கோரிக்கை மனுவை தாக்கல் செய்த போதே பதிவாளர் இதனை கூறியுள்ளார்.

இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள சுனில் வட்டகல,

வாய்மொழி மூல வாதங்களை முன்வைக்க சந்தர்ப்பம் வழங்குமாறு கோரி நாங்கள் கோரிக்கை மனுவொன்றை தாக்கல் செய்தோம்.

எனினும் வாய்மொழி மூல வாதங்கள் நிறைவடைந்து விட்டதாக உயர்நீதிமன்ற பதிவாளர் அப்போது கூறினார்.

இது மிகவும் ஆச்சரியமானது எங்கு யாரிடம் வாய்மொழி மூலம் வாதங்கள் பெறப்பட்டது. இதுதான் நாட்டின் சட்டத்திற்கு நேர்ந்துள்ள கதி எனக் குறிப்பிட்டுள்ளார்.


அதேவேளை அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் தான் மூன்றாவது முறையாக போட்டியிட முடியுமா என்பது குறித்து உயர்நீதிமன்றத்தின் கருத்தை அறிய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ சமர்பித்திருந்த கடிதம் தொடர்பில் எழுத்து மூலமான வாதங்களை முன்வைக்க இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்திற்கு உயர்நீதிமன்றம் வழங்கிய காலஅவகாசம் இன்று பிற்பகல் 3 மணியுடன் நிறைவடைந்தது.

எனினும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் இன்று எழுத்து மூலமான வாதங்களை முன்வைக்கவில்லை. இது தேசிய முக்கியத்துவமிக்க விடயம் என்ற காரணத்தினால், எந்த தரப்பிற்காவது பாதிப்பு ஏற்படுவதை தவிர்க்கும் நோக்கில் சங்கம் இந்த தீர்மானத்தை எடுத்ததாக இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும் உயர்நீதிமன்றம் இந்த விடயத்தை விவாதத்திற்கு எடுத்தால், வாதங்களை முன்வைப்பது சட்டத்தரணிகள் சங்கம் முடிவு செய்துள்ளது.

ஜனாதிபதி முன்வைத்துள்ள கடிதம் தொடர்பான உயர்நீதிமன்றத்தின் கருத்து எதிர்வரும் திங்கட் கிழமை அறிவிக்கப்பட உள்ளது.

மகிந்த ராஜபக்ஷவுக்கு மூன்றாவது முறையாகவும் போட்டியிட முடியும் என்ற கருத்தையே உயர்நீதிமன்றம் வெளியிடும் என கூறப்படுகிறது.

இரகசியமான இதற்கான முனைப்புகள் உயர்நீதிமன்றத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக நீதித்துறையின் உட்தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக