புதன், 5 நவம்பர், 2014

வடமாகாணத்தில் குழு மோதல்கள் மற்றும் தெரு சண்டைகள் அதிகரித்துள்ளன முருகேசு சந்திரகுமார்..!!

வடமாகாணத்தில் குழு மோதல்கள் மற்றும் தெரு சண்டைகள் அதிகரித்துள்ளன. அரசியல் தரப்புக்கள் சில தமது தேவைகளுக்காக இவற்றைப் பயன்படுத்திக் கொள்வதாக குழுக்களின் பிரதித் தலைவர் முருகேசு சந்திரகுமார் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

யுத்தத்தின் பின்னர் வடக்கில் ஏற்பட்டிருக்கும் இயல்பு வாழ்க்கையைக் குழப்பும் வகையில் தெருச் சண்டைகள், குழுச் சண்டைகள் என்பன அதிகரித்துள்ளன. இவ்வாறான சண்டைகளை சில அரசியல் தரப்புக்கள் தமது தேவைகளுக்காகத் தூண்டிவிடுகின்றன. இவ்வாறான செயற்பாடுகள் கட்டுப்படுத்தப்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

சட்டம் ஒழுங்கு அமைச்சின் மீதான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு கூறினார். தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,

சட்டம் ஒழுங்குத் துறையானது சுயாதீனமாக இருக்க சகல அரசியல் தரப்பினரும் இடமளிக்க வேண்டும். வடக்கு கிழக்கில் இன்று சட்டம் ஒழுங்கின் நிலைமை ஓரளவு திருப்திப்படக் கூடிய நிலைமையில் இருக்கிறது. ஆனால் இவை மேலும் மேம்படுத்தப்பட வேண்டியுள்ளது.

குறிப்பாக யாழ்ப்பாணத்தில் தெருச்சண்டைகள் குழு மோதல்கள் அதிகரித்துள்ளன. இவ்வாறான குழுவினருக்கு எதிராக முறைப்பாடுகளைச் செய்தால் அவர்களால் தமக்கு ஏதாவது ஆபத்து வந்துவிடும் என்ற அச்ச நிலை மக்கள் மத்தியில் காணப்படுகிறது. இவ்வாறான செயற்பாடுகளுக்கு சில அரசியல் தரப்பினரின் ஒத்துழைப்பும் உள்ளது. இது கட்டுப்படுத்தப்பட வேண்டும். அது மட்டுமன்றி முறைப்பாடு செய்பவர்கள் பாதுகாக்கப்பட வேண்டும்.


நாட்டில் சட்டம், ஒழுங்கு திருப்திகரமாக இருக்கும்போதுதான் அந்நாட்டின் நன்மதிப்பு வெளியில் தெரியும். ஆகையால் சட்டம் ஒழுங்கு துறை சுயாதீனமாக இருக்க வேண்டும். எனினும் இதில் அரசியல் தலையீடுகள் இருப்பதாக எதிர்க்கட்சிகள் மத்தியில் குற்றச்சாட்டுக்கள் இருக்கின்றன. பொலிஸார் சுயாதீனமாக செயற்பட அனைத்துத் தரப்பினரும் இடமளிக்க வேண்டும் என்றும் கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக