திங்கள், 7 ஜூலை, 2014

அரசாங்கத்தை நம்பி ஒப்படைத்த எனது கணவரை திருப்பி தாருங்கள் பெண்ணொருவர் கண்ணீருடன் சாட்சியம்....!!

இந்த அரசாங்கத்தின் மீது முழு நம்பிக்கை வைத்து எனது கணவனை இராணுவத்தினரிடம் ஒப்படைத்தேன். அதனால், எனது கணவரை ஒப்படைத்தது போலத் திருப்பித் தரும்படி நேற்றைய தினம் புதுக்குடியிருப்பில் காணாமற்போனோரைக் கண்டறியும் ஜனாதிபதி ஆணைக்குழு முன்பாக பெண்ணொருவர் கண்ணீருடன் சாட்சியமளித்தார்.
முல்லைத்தீவு மாவட்டம், புதுக்குடியிருப்புப் பிரதேச செயலகத்தில் காணாமற்போனோரைக் கண்டறியும் ஜனாதிபதி ஆணைக்குழு முன்பாக காணாமற்போனோரின் உறவினர்கள் சாட்சியமளிக்கும் நடவடிக்கை நேற்று ஞாயிற்றுக்கிழமை 2வது நாளாக இடம்பெற்றது.

இதன்போதே காணாமற்போன இராசையா இராத்தனன் என்பவரின் மனைவி சுபத்திரா என்பவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து சாட்சியமளிக்கையில்,

கடந்த 2009ம் ஆண்டு மே மாதம் 17ம் திகதி முள்ளிவாய்க்காலில் வைத்து எனது கணவரை இராணுவத்தினரிடம் ஒப்படைத்தேன்.



அதன்பின்னர் எனது கணவர் நோய்வாய்ப்பட்ட நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அதேயாண்டு ஜுன் மாதம் 22ம் திகதி அனுமதிக்கப்பட்டதாக தகவல் கிடைத்து நானும், எனது கணவரின் தந்தையும் சென்று பார்த்தோம்.

மறுநாள் காலையில் எனது மாமனார் கணவருக்குச் சாப்பாடு கொடுத்துவிட்டு வந்தார். அதன் பின்னர் எனது கணவர் வைத்தியசாலையில் இருந்து காணாமற்போயிருந்தார்.

இந்நிலையில் புதுக்குடியிருப்பினைச் சேர்ந்த இராசன் என்பவர், எனது கணவரை மீட்டுத் தருவதாகக்கூறி 2010ம் ஆண்டு ஜுன் மாதம் 24ம் திகதி எனது மாமனாரிடம் வலுக்கட்டாயமாக 50,000 ரூபாவை பெற்றுச் சென்றார்.

இது தொடர்பில் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்திலும் முறையிட்டிருந்தோம். இந்நிலையில் 2012ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 10ம் திகதி வவுனியா ஜோசப் முகாமில் எங்களை விசாரணைக்கு உட்படுத்தியிருந்தனர்.

மேலும், 2012ம் ஆண்டு டிசெம்பர் மாதம் 27ம் திகதி முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து எனது கணவருக்கு மரணச்சான்றிதழ் எடுக்கும்படியும் 1 லட்சத்து 50 ஆயிரம் ரூபா பணம் தருவதாகவும் கேட்டனர். அதற்கு நான் மறுத்திருந்தேன்.

தொடர்ந்து 2013 செப்ரம்பர் மாதம் 12ம் திகதி வவுனியாவிலுள்ள சி.ஐ.டியினர் என்னையும் எனது மாமனாரையும் முழுமையான விசாரணைக்குட்படுத்தினர்.

எனக்கு 9 வயதிலும் 7 வயதிலும் இருமகன்கள் உண்டு. எனக்கு எனது கணவர் வேண்டும். அவரை உயிருடன் தாருங்கள் என கண்ணீர் மல்கக் கேட்டார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக