வெள்ளி, 11 ஜூலை, 2014

இந்து மயானத்தில் இறுதிக் கிரியை நடத்த தடைபோடும் கடற்படையினர்....!!

திருகோணமலை மாவட்டம் சம்பூரை அண்மித்த கடற்கரைச்சேனை இந்து மயானத்தில் இறுதிக்கிரியைகளை நடத்த கடற்படை தொடர்ந்தும் அனுமதி மறுப்பதாக கிழக்கு மாகாண சபை உறுப்பினரான குமாரசாமி நாகேஸ்வரன் குற்றம் சாட்டியுள்ளார்.
கடற்கரைச்சேனை கடற்படை முகாமின் கட்டுப்பாட்டிலுள்ள இந்து மயானத்தை மக்கள் பாவனைக்கு விடுவிப்பது தொடர்பாக எதிர்வரும் செவ்வாய்க்கிழமை கூடவுள்ள கிழக்கு மாகாண சபை அமர்வின்போது சபையின் கவனத்திற்கும் கொண்டுவரவுள்ளதாக குறிப்பிட்டார்.

அந்த பகுதியில் மீள்குடியேற்றத்தின் பின்னர் 4 வருடங்களுக்கு மேலாக சம்புக்கழி, கடற்கரைச்சேனை, சந்தோஷபுரம் உட்பட ஐந்து கிராமங்களை சேர்ந்த மக்கள் இது தொடர்பாக பிரச்சினைகளை எதிர்நோக்குவதாக கூறப்படுகின்றது.



கடற்படை முகாம்க்கு அருகாமையிலுள்ள இந்த மயானம் உயர் பாதுகாப்பு வலயமாக இல்லாதபோதிலும் தற்போது கடற்படையினரின் கட்டுப்பாட்டிலே இருப்பதாக குமாரசாமி நாகேஸ்வரன் தெரிவிக்கிறார்.

2006ம் ஆண்டு போர்ச் சூழல் காரணமாக வெளியேறிய இக்கிராமங்களை சேர்ந்த மக்கள் 2014ம் ஆண்டு மீளக்குடியேற்றப்பட்ட காலம் தொடக்கம் மயானம் தொடர்பான பிரச்சினைக்கு முகம் கொடுத்து வருவதாகவும் அவர் கூறுகிறார்.

இந்த கிராம மக்களை பொறுத்தவரை தற்போது தமது சொந்த நிதியில் கொள்வனவு செய்துள்ள அரை ஏக்கர் காணியிலே இறந்தவர்களின் இறுதிக்கிரியைகளை நடத்துகிறார்கள். அந்த நிலம் கூட அவர்களுக்கு போதுமானதாக இல்லை என்றும் கிழக்கு மாகாண சபை உறுப்பினரான குமாரசாமி நாகேஸ்வரன் சுட்டிக்காட்டுகின்றார்.

இது தொடர்பாக கடற்படையின் ஊடகப் பேச்சாளரான கோசல வர்ணகுலசூரிய தெரிவிக்கையில்,

குறித்த காணி தொடர்பாக ஆராய்ந்த பின்னரே பதில் கூற முடியும். திருகோணமலை துறைமுகத்திற்குரிய நுழைவாயில்களில் துறைமுகத்தின் பாதுகாப்புக்காக கடற்படை நிலை கொண்டுள்ளது. அதுவும் தனியார் காணிகளில் அல்ல. அரச காணிகளிலேயே நிலை கொண்டுள்ளது என தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக