வெள்ளி, 11 ஜூலை, 2014

வட மாகாண ஆளுனர் சந்திரசிறியின் பதவிக்காலம் நீடிப்பு..!!!

வடமாகாண சபையின் செயற்பாடுகளை முன்னெடுக்கவிடாது வடமாகாண ஆளுனர் ஜி.ஏ.சந்திரசிறி இடைஞ்சல்களை ஏற்படுத்தி வருகின்றார் என்று குற்றஞ்சாட்டப்பட்டுள்ள நிலையில் அவரது பதவிக்காலத்தை மேலும் மூன்று மாதங்களுக்கு நீடிப்பதற்கு அரசாங்கம் ஆலோசித்து வருவதாக மிகவும் நம்பகரமான வட்டாரங்களிலிருந்து தெரியவருகின்றது.
இலங்கையின் அரசியலமைப்பில் கூறப்பட்டுள்ளதன் பிரகாரம், ஆளுனர் ஒருவரின் பதவிக்காலம் அவரது நியமன நாளில் இருந்து ஐந்து ஆண்டுகளாகும்.

வடமாகாண ஆளுனராக, முன்னாள் யாழ். மாவட்ட படைத்தளபதி மேஜர் ஜெனரல் ஜி.ஏ.சந்திரசிறி 2009ம் ஆண்டு ஜூலை 12ம் திகதி ஜனாதிபதி முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார். அவருடைய ஐந்து ஆண்டு பதவிக்காலம் இன்று வெள்ளிக்கிழமை 11ம் திகதியுடன் நிறைவடைகின்றது.

இந்தநிலையில் புதிய ஆளுனர் ஒருவரை நாளை மறுநாள் ஜனாதிபதி நியமிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் புதிய ஆளுனர் யார் என்ற விபரம் இன்னமும் அறிவிக்கப்படவில்லை.


வடக்கு மாகாணசபையில் ஆளுனராகப் பதவி வகித்த முன்னாள் இராணுவ அதிகாரியான மேஜர் ஜெனரல் சந்திரசிறி சர்ச்சைக்குரிய ஒருவராகவே இருந்து வந்தார்.  கடந்த செப்ரெம்பர் மாதம் வடக்கு மாகாணசபை தெரிவு செய்யப்பட்ட போதிலும் அதனைச் சுதந்திரமாக இயங்கவிடாமல் தடுத்து வந்ததுடன் அதன் நிர்வாகத்தில் தலையீடுகளைச் செய்து குழப்பம் விளைவித்து வந்தார்.

வடக்கு மாகாணத்துக்கு இராணுவப் பின்னணி கொண்ட ஆளுனர் வேண்டாம் என்றும் சிவில் பின்னணி கொண்ட ஆளுனர் ஒருவரை நியமிக்குமாறும் வடக்கு மாகாணசபையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் தொடர்ச்சியாக வலியுறுத்தி வந்த போதிலும் ஜனாதிபதி அதனைக் கண்டுகொள்ளவில்லை.

எனினும் கடந்த ஜனவரி மாதம் தெல்லிப்பளையில் நடந்த நிகழ்வொன்றில் கலந்து கொண்ட ஜனாதிபதியுடன் இது குறித்து வடமாகாண முதல்வர் விக்னேஸ்வரன் பேசிய போது சந்திரிசிறியின் பதவிக்காலம் முடிவடைய இன்னும் ஆறு மாதங்களே உள்ளதாகவும் அதுவரை பொறுத்துக் கொள்ளுமாறும் கேட்டிருந்தார்.

அதன் பின்னர் சிவில் ஆளுனர் ஒருவரை நியமிக்க நடவடிக்கை எடுப்பதாகவும் வடமாகாண முதல்வருக்கு ஜனாதிபதி உறுதிமொழி அளித்திருந்தார்.

இந்தநிலையில் மீண்டும் பாதுகாப்புத் தரப்புடன் தொடர்புடையவரும் கோத்தாபய ராஜபக்சவுக்கு நெருக்கமானவருமான பிரதி பொலிஸ் மா அதிபர் அனுர சேனநாயக்க வடமாகாண ஆளுநராக நியமிக்கப்படவுள்ளதாக சில வாரங்களுக்கு முன்னர் செய்திகள் வெளியாகியிருந்தன. எனினும் இதுவரை அடுத்த ஆளுனர் யார் என்பது உறுதியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக