செவ்வாய், 1 ஜூலை, 2014

வடக்கில் ஆயுதங்களை வைத்திருப்பவர்கள் ஒப்படைக்கும்படி படையினர் விளம்பரங்கள்...!!

வடமாகாணத்தில் போர் நிறைவடைந்து 5வருடங்கள் கடந்துள்ள நிலையில், சில மாவட்டங்களில் குறிப்பாக போரினால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் ஆயுதங்களை வைத்திருப்பவர்கள் அவற்றை படையினரிடம் ஒப்படைக்கும்படி படையினர் விளம்பரங்களை ஒட்டிவரும் சம்பவம் நடைபெற்று வருகின்றது.
2009ம் ஆண்டு போர் நிறைவடைந்த பின்னர் போர் நடைபெற்ற இடங்கள், மற்றும் தமிழீழ விடுதலைப் புலிகள் நிலைகொண்டிருந்த பகுதிகள் முழுமையாக சல்லடையிடப்பட்டதன் பின்னரே மக்கள் அந்த இடங்களில் மீள்குடியேற அனுமதிக்கப்பட்டதுடன், மேற்கண்டவாறான பல இடங்களில் இன்னமும் இரகசியங்கள் இருப்பதாக கூறி, அங்கெல்லாம் படையினர் நிலைகொண்டிருக்கின்றனர்.

மேலும் கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் சகல பகுதிகளிலும் சாதாரண கிராமங்கள் வரையில் ஊடுருவி இருக்கும் படைப் புலனாய்வாளர்கள் மக்களிடம் அவ்வாறான ஆயுதங்களை வைத்திருக்க அனுமதிக்கவும் போவதில்லை என்பதே உன்மையாகும்.

இவற்றைவிட கைதுசெய்யப்பட்ட மற்றும் சரணடைந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளிகள் வழங்கிய தகவலினடிப்படையில் இனிமேல் இல்லை என்னும் அளவிற்கு பெருமளவு ஆயுதங்கள் மற்றும் வாகனங்களை புதைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் படையினர் மீட்டிருக்கின்றனர்.


இந்நிலையில் யாழ்.மாவட்டத்தின் சில பகுதிகள் மற்றும் கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் ஆயுதங்களின் விபரங்கள் குறிக்கப்பட்டு அவற்றை வைத்திருந்தால் படையினரிடம் ஒப்படையுங்கள் அவற்றுக்காக பணம் வழங்கப்படும் என பரவலாக துண்டுப் பிரசுரங்கள் கவர்ச்சிகரமாக ஒட்டப்பட்டிருக்கின்றது.

இதன் பொருள் வடமாகாணத்தில் அதிலும் குறிப்பாக கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் மக்களிடம் இன்னமும் ஆயுதங்கள் இருக்கின்றன.

எனவே அவற்றை அரசாங்கம் மிக அமைதியான முறையில் சலுகைகளை வழங்கி மீளப்பெற்றுக் கொள்கின்றது என்பதே. மேலும் நேற்றைய தினம் இலங்கையின் இராணுவத் தளபதி,
ருவான் வணிசூரிய வடமாகாணம் இன்னமும் தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக இருப்பதாக தெரிவித்திருக்கின்றார்.

துண்டுப்பிரசுரம் ஒட்டப்படுவதும், இராணுவத் தளபதி கூறியிருக்கும் கருத்தும் மக்களிடம் இன்னமும் ஆயுதங்கள் இருக்கின்றன என காட்டுவதற்கான ஒரு முயற்சியே என மக்கள் தெரிவிக்கின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக