செவ்வாய், 10 ஜூன், 2014

வன்னியில் கடலட்டை அள்ளும் அரசியல் 'திமிங்கிலங்கள்’ - வைத்திய கலாநிதி சி.சிவமோகன் காட்டம்!!

மாத்தளன் முதல் சாலை வரையான கடற்கரை அடங்கிய பிரதேசத்தில் இராணுவத்தின் ஆதரவுடன் அரசசார்பு முதலாளிகள் (அரச திமிங்கிலங்கள்) கடலட்டை பிடிக்கும் கொள்ளையில் ஈடுபட்டு வருகின்றனர். மேற்படி பிரதேசத்திற்கு தமிழ் மக்கள் செல்ல முடியாதவாறு இராணுவத் தடை முகாம் போடப்பட்டுள்ளது. இவர்கள் இரவு நேரங்களில் ஒளியூட்டி ஒட்சிசன் சிலிண்டர்களின் உதவியுடன் இத்தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனால் தமது வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதாக முல்லை
மாவட்ட கரையோர மீனவர்கள் தெரிவிக்கின்றனர். இரவில் ஒளியூட்டி கடலட்டை தொழிலில் ஈடுபடுபவர்களால் மீன்கள் ஆழ்கடலை தாண்டி கரையோரப்பகுதிக்கு வருவதில்லை எனவும் இதனால் தமது நாளாந்த மீன்பிடி தொழில் பத்து மடங்கு குறைவடைந்து 30 கிலோவில் இருந்து 3 கிலோ வரை குறைந்து விட்டதாக மக்கள் அங்கலாய்கின்றனர்.

மேலும் கடலட்டை அள்ளும் கூட்டம் சங்குகளையும் அள்ளிவருவதால் ஆழ்கடலில் இருந்து சங்குகளில் இருக்கும் கடலின தாவர வகைகளை உண்ண வரும் மீனினம் கரைக்கு வருவதில்லை இதனாலும் தமது மீன்பிடி தொழில் பாதிக்கப்பட்டுள்ளதாக முல்லை மாவட்ட மீனவர்கள் தெரிவிக்கின்றனர். பாதிக்கப்பட்ட மாத்தளனில் வசிக்கும் மீனவர் ஒருவர் தெரிவிக்கையில் - "எம்மால் தொழில் செய்ய முடியவில்லை அதனால் எமது வள்ளங்களை நான் கடலுக்குள் கடலட்டை பிடிப்பவர்களிடம் கொடுத்துவிட்டு வயிற்றுப் பிழைப்பு நடத்துகின்றேன்" - என்றார். கடலட்டை பிடிப்பது சட்டவிரோதம் என்பது நாம் அறிந்ததே, இதற்குரிய அனுமதிப்பத்திரம் கடலட்டை அள்ளுபவர்களிடம் உள்ளதா? நாம் அறியோம். அப்படி அனுமதிப்பத்திரம் வழங்குவதாயினும் எமது வன்னி பிரதேச மீனவர்களுக்கல்லவா அந்த உரிமை உள்ளது.

போரால் நொந்து நூலாகியிருக்கும் அவர்களை சுரண்டி வாழ்வதில் இந்த அரசியல் திமிங்கிலங்களுக்கு எவ்வளவு சந்தோசம். அரச ஆதரவுடன் இராணுவத்தினரின் உதவியுடன் செயல்படும் இந்த கூட்டங்கள் யார்? அரசசார்புக் கூட்டங்களின் கையாட்களா? இல்லையெனின் இராணுவம் ஏன் இவர்களை கண்டுகொள்வதில்லை? சட்டம், நீதிக்கு தமிழன் சிங்களவன் என பாகுபாடு பார்க்கும் கலாசாரம் நிலைகொண்டுள்ள வன்னி மண்ணில் வாழும் எமது ஏழ்மை மீனவ சமுதாயத்தை காப்பாற்ற என்ன வழி?

நிரந்தர அரசியல் தீர்வு மூலம் சுயாதீன பொலிஸ் மற்றும் காணி அதிகாரம் எமக்குக் கிடைக்கும் வரை இது தொடரும் என எதிர்பார்க்கலாம். எமது தமிழ் மக்களை அடக்கியாள இராணுவம் மட்டும் போதாது என்று பொலிஸ் அதிகாரமும் வேண்டும் என கருதும் இந்த அரசுடன் எப்படி நியாயபூர்வமான உரிமைகளை எதிர்பார்க்க முடியும். எனவே ஒன்றிணைக்கப்பட்ட வடக்கு, கிழக்கு மாநிலத்திற்கு பூரண சுயாதீன பொலிஸ், காணி அதிகாரம் கோரி தமிழ் மக்கள் போராட வேண்டிய காலம் நெருங்கி வருகிறது. - என்று வைத்திய கலாநிதி சி.சிவமோகன் தெரிவித்தார். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக