
பக்தர்களின் நலன் கருதி விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதோடு, இதற்கென 4 ஆயிரம் பொலிஸார் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள் ளதாகவும் அவர் குறிப்பிட்டார். இராணுவத்தினரும் விசேட அதிரடிப்படையினரும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.
இம்முறை பொசொன் வாரமாக 9 ஆம் திகதி முதல் 15 ஆம் திகதி வரை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதோடு, பக்தர்களுக்கு நாட்டின் பிரதான நகரங்களிலிருந்து அநுராதபுரத்திற்கு வருவதற்கு விசேட போக்குவரத்து
ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதேவேளை அநுராதபுரம்- மிஹிதலைக்கிடையில் இலவச ரயில் சேவை இடம்பெறவுள்ளதோடு, இதற்காக இருபத்தாறு இலட்சம் ரூபா நிதி செலவிடப்படும். மேலும் அநுராதபுரத்தில் விசேட இரவு போக்குவரத்து ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
புனித நகரப் பகுதியை மையப்படுத்தி சுகாதார மத்திய நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இம்முறை 200 ற்கு மேற்பட்ட அன்னதான சாலைகளும் செயற்படும். இவைகளை சுகாதாரப் பிரிவினர் கண்காணித்து வருகின்றனர். தேசிய பொசோன் உற்சவத்தை முன்னிட்டு இம்மாதம் 09 ஆம் திகதி முதல் 15 ஆம் திகதி வரை அநுராதபுரம் மாவட்டத்திலுள்ள சகல மதுபானசாலைகளும் மூடப்படும் என அநுராதபுரம் மதுவரித் திணைக்கள ஆணையாளர் எம். ஏ. சேமசிங்க தெரிவித்தார்.
இரகசியமான முறையில் மதுபானம் விற்பனை செய்து கண்டுபிடிக்கப்பட்டால் அந்த மதுபானச்சாலைகளின் அனுமதிப்பத்திரம் இரத்துச் செய்யப்படும் எனவும் ஆணையாளர் மேலும் தெரிவித்தார். அநுராதபுரம் மற்றும் கலன்பிந்துனுவெவ கல்வி வலயங்களைச் சேர்ந்த 15 பாடசாலைகளை இம்மாதம் 09 ஆம் திகதி முதல் 15 ஆம் திகதி வரை மூடுவதற்கு வடமத்திய மாகாண கலவித் திணைக்களம் தீர்மானித்துள்ளது.
அநுராதபுரம் மற்றும் மிஹிந்தலை தந்திரிமலை ஆகிய வணக்க வழிபாடுகளுக்கு வரும் யாத்திரிகர்களுக்கு தேவையான பாதுகாப்பு வழங்க 4000 பொலிஸார் நியமிக்கப்பட்டுள்ளனர். பொலிஸார் தங்குவதற்காக இந்த பாடசாலைகள் மூடப்பட்டுள்ளன. விவேகானந்தா தமிழ் மகா வித்தியாலயம். சாஹிரா மகா வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளும் மூடப்பட்டுள்ளன.
யாத்திரிகர்கள் குளிக்கும் குளங்களை அண்மித்த பிரதேசங்களில் அவர்களின் பாதுகாப்பு கருதி கடற்படை முதலுதவி உயிர்காப்பு படை குழுக்கள் 16 தயார்படுத்தப்பட்டுள்ளன. பொசொன் உற்சவ காலங்களில் அநுராதபுரத்திற்கு வணக்க வழிபாட்டுக்கு வரும் பக்தர்கள் நீராடும் எட்டு குளங்களை உள்ளடக்கும் வகையில் இந்த உயிர்காப்பு குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக