ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தலைமையிலான இலங்கை அரசாங்கம் எதை செய்தாலும் பாதுகாக்கும் சோனியா தலைமையிலான காங்கிரஸ் தோல்வி ஆட்சியாளர்களுக்கு சிக்கலை தோற்றுவித்துள்ளதாக நவசமசமாஜக் கட்சி தெரிவித்துள்ளது.
இந்தியத் தேர்தல் முடிவு குறித்து நவசமசமாஜக் கட்சியின் பொதுச் செயலாளர் கலாநிதி விக்கிரமபாகு கருணாரட்ன கருத்துத் தெரிவிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்;
வெற்றுக் காசோலையொன்றில் கையொப்பமிட்டு வழங்கியது போன்று சோனியா காந்தி தலைமையிலான காங்கிரஸ் இலங்கை அரசாங்கத்துக்கு சகல வழிகளிலும் உதவியது.
அதாவது ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அரசாங்கம் எதைச் செய்தாலும் சோனியாவின் காங்கிரஸ் பாதுகாக்கும் என்ற நிலையே பல வருடமாகக் காணப்பட்டு வந்தது. இரண்டாம் உலக யுத்தத்தின்
பின் ஆசிய மண்ணிலே மிக பெரிய மனித அழிவு இலங்கை மண்ணில் இடம்பெற்றது. இதற்குச் சோனியாவின் அரசாங்கமே பின்புலமாக இருந்தது. இலங்கைக்கு எதிரான ஐக்கிய நாடுகளின் மனித உரிமைப் பேரவை மூலம் கொண்டு வரப்பட்ட தீர்மானங்களை நீர்த்துப் போக வைத்த பெருமை இந்திய அரசாங்கத்தையே சாரும். இந்நிலையில் இந்திய மக்கள் சோனியாவின் அரசாங்கள் மீது வெறுப்புற்று மாற்று ஆட்சியை நாடியுள்ளனர். குறிப்பாக தமிழ் நாடு கொதி நிலையில் காணப்பட்டது. தேர்தலில் அனைத்து கட்சிகளுமே காங்கிரஸுக்கு ஏதிராக களத்தில் நின்றன. இந்திய மக்கள் இலங்கை ஆட்சியாளர்கள் மீது கடும் வெறுப்புணர்வில் உள்ளனர் என்பதை தேர்தல் பரப்புரைகளில் காணமுடிந்தது. தமிழ் நாட்டை பொறுத்த வரை தி.மு.க. ,காங்கிரஸ் உறவை முறித்தே தேர்தல் களத்தில் இறங்கியது தமிழ் நாட்டில் காங்கிரஸுக்கு எதிரான உணர்வலையின் தாக்கமே இதற்குக் காரணமாகும். இந்நிலையில் ஆட்சி பீடம் ஏறியுள்ள புதிய அரசாங்கங்கள் தமிழ் நாட்டு மக்களின் உணர்வலைகளை நிச்சயம் கவனத்தில் எடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. விகாரைக்குச் சென்றும் பொது நிகழ்வுகளில் பிள்ளைகளை தூக்கிக் கொஞ்சியும் ஏமாற்று நாடகம் நடத்தும் மகிந்த அரசாங்கத்துக்கு இந்திய ஆட்சி மாற்றம் சிக்கலை ஏற்படுத்தப்போகின்றது. ஏற்கனவே ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் உட்கட்சிப் பூசல் உச்ச நிலையிலுள்ளது. யாராக இருந்தாலும் எல்லா மக்களையும் சில காலத்துக்கு ஏமாற்ற முடியும். எல்லா மக்களையும் எல்லா நேரத்திலும் ஏமாற்ற முடியாது .எனவே மகிந்த ராஜபக்ஷவின் சரிவு தொடங்கிவிட்டதென்றே கூற வேண்டியுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக