சனி, 17 மே, 2014

அதிக செலவில் உலககோப்பை போட்டிகள் : பிரேசில் பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்!!


தென் அமெரிக்க நாடான பிரேசிலில் வரும் ஜூன் மாதம் 12ஆம் தேதி உலகமே ஆவலுடன் எதிர்நோக்கும் கால்பந்து உலகக் கோப்பை திருவிழா துவங்க உள்ளது. இதற்கான புதிய விளையாட்டு அரங்கங்கள் மற்றும் பழைய அரங்கங்களைப் புதுப்பிக்கும் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன.

வேலையில்லாத் திண்டாட்டமும், பொருளாதார சீர்குலைவும் மக்களைப் பாதித்துள்ள இந்த நேரத்தில் மக்களின் வரிப்பணம் அவர்களின் சுகாதாரம், மருத்துவ மேம்பாடு போன்றவற்றிற்கு செலவிடப்படாமல் இதுபோல் விளையாட்டு நிகழ்வுகளுக்காக
செலவிடப்படுவது குறித்து கடந்த ஜூன் மாதமே அங்கு பெரும் ஆர்ப்பாட்டம் வெடித்தது.

தற்போது பொதுத் தேர்தலுக்கு நான்கு மாதமும், விளையாட்டு நிகழ்ச்சிகள் துவங்க ஒரு மாதமும் இருக்கும் நிலையில் நேற்று அங்கு மீண்டும் பொதுமக்களின் ஆர்ப்பாட்ட ஊர்வலங்கள் நடைபெற்றன.

சமீப காலங்களில் இத்தகைய ஆர்ப்பாட்டங்கள் வன்முறைகளாகவும், கலவரங்களாகவும் மாறுவது காவல்துறையினருக்கும் அதிக பளுவைக் கொடுப்பதாகவே அமைந்து வருகின்றது. கிட்டத்தட்ட 50க்கும் மேலான நகரங்களில் சென்ற ஆண்டு போராட்டத்தை நினைவு கூறும் வகையில் நேற்று முழுவதும் தொடர் ஆர்ப்பாட்டங்கள் இடம் பெற்றன.

நாட்டின் பெரிய நகரமான சாவ் பாலோவில் முக்கிய சந்திப்புகளில் எரியும் டயர்களால் ஆர்ப்பாட்டக்காரர்கள் தடை ஏற்படுத்தியிருந்தனர். தலைநகர் பிரேசிலியாவில் ஒரு கட்டிடம் இவர்களால் தாக்கப்பட்டது. ரியோ டி ஜெனிரோவில் உள்ள முக்கிய சாலைகளிலும் இவர்கள் போக்குவரத்தைத் தடை செய்தனர்.

கால்பந்து விளையாட்டு நடைபெற உள்ள வடகிழக்கு நகரமான காவல்துறையினரின் மூன்று நாள் வேலைநிறுத்தத்தைப் பயன்படுத்திக்கொண்டு அங்கிருந்த கடைகளையும், வர்த்தக வளாகங்களையும் இவர்கள் சூறையாடினர்.

அந்தப் பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களையும் இவர்கள் சேதப்படுத்தினர். பின்னர் நிலைமையை சமாளிக்க சிறப்பு தேசிய பாதுகாப்புப் பிரிவு அங்கு வரவழைக்கப்பட்டது. வீடற்ற தொழிலாளர் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் விளையாட்டு நிகழ்ச்சி தொடங்க உள்ள சாவ் பாலோ அரங்கத்தின் முன்னும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அதேபோல் அங்கு கட்டப்பட்டு வரும் அதிக செலவினம் கொண்ட அரங்கத்தின் நிர்மாணப் பணிகளைக் கவனித்துவரும் மாநில நிறுவனத்தின் தலைமையகத்திலும் நுழைந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக