வியாழன், 22 மே, 2014

நீதி கேட்டு ஜெயலலிதாவுக்கு அனந்தி கடிதம்....!!!!!

கொல்லப்பட்ட எமது கணவன்மார்களுக்காகவும், பிள்ளைகளுக்காகவும், நம்மவர்களுக்காகவும் நீதி கோரி மகாபாரத பாஞ்சாலிகளாகக் குமுறி நிற்கிறோம்"
இப்படி தங்களின் நிலைப்பாட்டை வெளிப்படுத்தி தமிழக முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவுக்குக் கடிதம் எழுதியிருக்கின்றார் வடக்கு மாகாண சபையின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர் திருமதி அனந்தி சசிதரன்.

நாடாளுமன்றத் தேர்தலில் தமிழக முதல்வர் தலைமையிலான கட்சி பெரு வெற்றியீட்டியமையைப் பாராட்டித் தாம் வரைந்த கடிதத்திலேயே அவர்
இதனைத் தெரிவித்திருக்கின்றார் அந்தக் கடிதத்தின் முழு விவரம் வருமாறு:-

கௌரவ செல்வி ஜெ.ஜெயலலிதா தமிழ்நாடு முதலமைச்சர்

அம்மணி

ஈழத் தமிழ் பெண்களின் நம்பிக்கைக்கு வலுவூட்டும் வெற்றி

இந்தியாவில் இடம்பெற்று முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் பெற்ற வெற்றியானது ஈழத் தமிழ் பெண்களின் இடைவிடாத தொடர்ச்சியான போராட்டத்திற்கு நம்பிக்கையூட்டும் ஒரு வலிமையான வெற்றியாகவே நாம் பார்க்கிறோம். அவ்வகையில் தமிழகத்தின் வெற்றியின் நாயகியாக விளங்கிய மாண்புமிகு முதல்வர் ஜெயலலிதா அவர்களுக்கு எமது உளம் கனிந்த வாழ்த்துக்களையும் மனம் நிறைந்த மகிழ்ச்சியையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

காலம் எத்தனையோ பெண்களை உயர் அதிகாரங்களில் இருத்தியது. எனினும் அவர்களில் பெரும்பாலானோர் ஆணாதிக்க சமூகத்தின் நோக்கங்களை நிறைவேற்றுவதன் மூலமே தமது அதிகாரங்களை வெளிப்படுத்தினர். அதனால் அவர்கள் புகழ்பெற்ற பெண்மணிகளாகப் போற்றப்பட்டனர். ஆனால் தமிழக முதல்வர் ஜெயலலிதா ஜெயராம் அவர்கள் தனித்துவமான ஆளுமை மூலமும், எந்த முடிவையும் எந்த விளைவுகளுக்கும் அஞ்சாது, தானே எடுக்கும் வலிமை மூலமும் தமிழகப் பெண்களுக்கு மட்டுமன்றி உலகப் பெண்களுக்கே வழிகாட்டும் தலைவியாகவும் நம்பிக்கையூட்டும் துருவ நட்சத்திரமாகவும் விளங்கி வருகிறார். அந்த ஆளுமையும் ஆற்றலுமே அவரைத் தமிழகத்தின் ஒப்பற்ற தலைவியாகவும் ஈழத்தமிழ்ப் பெண்கள் நம்பிக்கையூட்டும் ஒளிவிளக்காகவும் உயர்த்தியுள்ளது.

நாம் இன்று கொல்லப்பட்ட எமது கணவர்மார்களுக்காகவும், பிள்ளைகளுக்காகவும் நம்மவர்களுக்காகவும் மகாபாரத பாஞ்சாலிகளாக குமுறி நிற்கின்றோம். நீதி கோரி வீதிகளில் இறங்கியுள்ளோம். உண்மைகளை கண்டறிய ஐக்கிய நாடுகள் சபையிலும் உரத்துக் குரல் கொடுத்தோம். எத்தனை அடக்குமுறைகள் எம்மீது ஏவப்பட்ட போதிலும், முள்ளிவாய்க்காலில் பறிக்கப்பட்ட எமது உறவுகளின் உயிர்களுக்கு அஞ்சலி செலுத்துவது கூட தடுக்கப்பட்ட போதிலும் கூட ஏந்திய போர்க்கொடியை தளரவிடாது இறுகப் பற்றியுள்ளோம். நீதி கோரி நடக்கும் நெடும் பயணத்தில் களைக்காது நீட்டப்படும் கொடு வாள்கள் மத்தியிலும் எங்கள் பயணம் தொடர்கிறது. எமது உரிமைக்குரலுக்கும், நீதி கோரலுக்கும் தமிழகம் தந்த பேராதரவு எமக்கு புதிய உற்சாகத்தை ஊட்டியது. மாணவர்களின் எழுச்சி புதிய பலத்தை வழங்கியது. எல்லாவற்றுக்கும் சிகரம் வைத்ததைப் போன்று தமிழக முதல்வர் தந்த உறுதியான, நேர்மையான ஆதரவு எமது பயணப் பாதிக்கும் பன்னீர் தூவியது!

மாண்புமிகு தமிழக முதல்வரே!

நீங்கள் ஆதரவு வழங்கிய ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் நாம் ஒவ்வொரு படி உயர்ந்தோம் என்பதை மகிழ்ச்சியுடனும் பெருமையுடனும் தெரிவிக்கிறோம். ஒரு பெண்ணின் மனதை இன்னொரு பெண்ணை விட வேறு எவராலும் புரிந்து கொள்ள முடியாது. அவ்வகையில் நமது துணைவர்களையும், உறவுகளையும் இழந்தும் பிரிந்தும் தவிக்கும் பெண்களின் மனக் கொந்தளிப்பை நீங்கள் உணர்ந்து கொள்வீர்கள்.

பொன்மனச் செம்மல் எம்.ஜி.ஆர். அவர்கள் ஐந்து கோடி ரூபாவை அள்ளித் தந்து எமது விடுதலைப் போராட்டத்தை வலுவூட்டியத்தை நாம் காலம் காலமாக நினைவில் வைத்துள்ளோம். அந்த மக்கள் திலகத்தின் ஒப்பற்ற நேர்மையையும் வீரமும் நிறைந்த பாதையில் பயணிக்கும் தங்களை நாம் மனமார வாழ்த்துகிறோம்.

எமது விடுதலைப் போராட்டத்தைத் தோற்கடிப்பதில் இந்தியாவின் காங்கிரஸ் அரசின் பங்கு எவ்வாறான முக்கியமானது என்பதை நாம் அறிவோம். எமது மக்களின் உயிரிழப்பில் அவர்களும் பங்காளிகளே. அவர்களுடன் கைகோர்த்து தி.மு.க. தலைவர் கருணாநிதி உண்ணாவிரத நாடகம் நடத்தி மக்களின் கோபத்தைத் தணித்து இனப்படுகொலைக்கு துணை போனதை நாம் மறந்துவிடவில்லை. காங்கிரஸ், தி.மு.க. கூட்டத்தைப் படுதோல்வியடைய வைத்து நீங்கள் அவர்களுக்கு தகுந்த பாடம் புகட்டியுள்ளீர்கள்.

மாண்புமிகு முதலமைச்சர் அவர்களே!

நீங்கள் தொடர்ந்து எமது உரிமைப் போராட்டத்துக்கு குரல் கொடுப்பீர்கள் என்பதிலும் மத்திய அரசை எமது இனப்பிரச்சினைக்கு ஒரு நிரந்தர தீர்வை எட்டும் வகையில் அழுத்தம் கொடுத்து வலியுறுத்துவீர்கள் என்பதையும் நாம் திடமாக நம்புகிறோம். மேலும் சரணைடைந்த, காணாமற்போன, உயிரிழந்த நமது உறவுகளுக்கான நீதி கோரி நிற்கும் பெண்களின் போராட்டத்திற்கு வலுவான ஆதரவு தருவீர்கள் என்பதிலும் உறுதி கொண்டுள்ளோம். தங்கள் ஆட்சி நிலை பெறவும், தமிழக மக்களுக்கும், ஈழமக்களுக்கும் தாங்கள் செய்யும் ஒப்பற்ற பணிகள் தொடரவும் எங்கள் வாழ்த்துக்களை மன மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறோம்.

இப்படிக்கு ச.அனந்தி வட மாகாண சபை உறுப்பினர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக