செவ்வாய், 20 மே, 2014

நினைவேந்தலால் பிரச்சினைகள் வருமாம்! பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தினரிடம் யாழ். தளபதி எடுத்துரைப்பு!!

''இறுதி யுத்தத்தில் உயிரிழந்த மக்களுக்கு அஞ்சலி செலுத்துவதற்கு உங்களுக்கு உரிமை இருக்கிறது. ஆனால் அதைக் கொண்டாடுவதால் தேவையற்ற பிரச்சினைகள் வரும், எனவே அந்த நிகழ்வைக் கைவிடுங்கள்'' - இவ்வாறு யாழ். பல்கலைக்கழக ஆசிரியர் சங்கப் பிரதிநிதிகளை தனது படைத்தலைமையகத்துக்கு அழைத்துத் தெரிவித்திருக்கிறார் யாழ்.மாவட்ட படைத் தளபதி மேஜர் ஜெனரல் உதயபெரேரா. இன்று காலை யாழ். பல்கலைக்கழக ஆசிரியர் சங்க பிரதிநிதிகளை அழைத்த அவர்,
நினைவேந்தல் நிகழ்வுகள் நடத்துவதைக் கைவிடுங்கள் என்று கோரியுள்ளார் இதற்குப் பதிலளித்த ஆசிரியர் சங்கத்தினர், 'நாம் யுத்தத்தில் இறந்துபோன மக்களுக்கே அஞ்சலி செலுத்தக் கோரினோம். அது எமது கடமை. தமிழ்ப் பாரம்பரியம். அதை அனுஷ்டிப்பதற்கு எமக்கு உரிமை இருக்கிறது' என்று தெரிவித்துள்ளனர். இதற்கு பதிலளித்த இராணுவத்தளபதி, ' உங்களுக்கு உரிமை இருக்கிறது.

ஆனால் இவ்வாறான நிகழ்வுகளை சிலர் தவறாகப் பயன்படுத்த முயற்சிக்கின்றனர். தேவையற்ற தலையீடுகளும் ஏற்படுகின்றன. எனவே அவற்றைத் தவிர்க்கும் வகையிலேயே இவ்வாறான நிகழ்வுகளை நடத்தவேண்டாம் என்று கேட்கிறோம்' - என்றார். அவ்வாறு ஏதாவது நிகழ்ந்தால் இராணுவத்தினர் தலையிடுவதும் தவிர்க்கமுடியாதது என்றும் இராணுவத்தளபதி தெரிவித்தார் என்று கூறப்படுகிறது. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக