சனி, 31 மே, 2014

ஜனாதிபதி அழைத்தால் அரசியலுக்கு வருவேன் என்கிறார் கோத்தபாய....!!!!

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ச அழைத்தால் அரசியலுக்கு வருவராம் அவரது சகோதரரும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளருமான கோத்தபாய ராஜபக்‌ச. அப்படி வந்தால் கொழும்பில்தான் தேர்தலில் குதிப்பாராம்! - இதனை அவரே தெளிவாகக் கூறியிருக்கின்றார்.
விஜய பத்திரிகை நிறுவனம் 'தேசய' (தேசம்) என்றொரு சிங்கள வார இதழை இவ்வாரம் முதல் வெளியிடுகின்றது. அதன் முதலாவது இதழுக்கு வழங்கிய விசேட செவ்விலேயே பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்‌ச இத் தகவலைத் தெரிவித்திருக்கின்றார்.

அந்தப் பேட்டியில் அவர் தெரிவித்த தகவல்களின் சாராம்சம் வருமாறு:-

ஜனாதிபதி என்னிடம் ஒப்படைத்த பணிகளை நான் செவ்வனே நிறைவேற்றியிருக்கிறேன். அரசியலுக்கு வரும் எண்ணம் எனக்கு இல்லை. ஆனால் அரசியலுக்கு வருமாறு ஜனாதிபதி என்னைப் பணித்தாரானால் நான்
அரசியலுக்கு வருவேன்.

நான் நாட்டுக்கு என்ன செய்துள்ளேன் என்பது மக்களுக்கு நன்கு தெரியும். எனக்கு மக்கள் அங்கீகாரமளிப்பார்கள். நான் அரசியலுக்கு வருவது நாட்டுக்குத் தேவை எனக் கருதி ஜனாதிபதி என்னை அழைப்பாராயின் அதற்குப் பின் நிற்கமாட்டேன்.

நாட்டுக்கு எந்த வகையில் நான் பணியாற்றுவது பொருத்தமானது என ஜனாதிபதி கருகின்றாரோ அந்த வகையில் நான் பணியாற்றுவேன். என்னிடம் ஒப்படைக்கப்பட்ட பொறுப்புக்களை நான் செவ்வனே நிறைவேற்றியமை போல எதிர்காலத்திலும் எனக்கு வழங்கப்படும் பொறுப்புகளை நான் தொடர்ந்து நிறைவேற்றுவேன்.

அரசியலுக்கு வருவதானால் நான் அம்பாந்தோட்டையில் குதிக்கமாட்டேன். கொழும்பில்தான் நான் இப்போது வசிக்கிறேன். இங்கிருந்துதான் அரசியலுக்குள் நுழைவேன். எனது குடும்பம் அரசியலில் இருபத்தியைந்து வருடங்களுக்கு மேல் பொறுப்பான பணிகளை ஆற்றியிருக்கின்றது.

நான் அரசியலுக்கு வருவதால் ராஜபக்‌சக்களின் ஆதிக்கம் அதிகரித்து விடும் என்றோ, அது தவறு என்றோ கூறமாட்டேன்.

அமெரிக்காவில் கென்னடி பரம்பரை, இந்தியாவில் நேரு தலைமுறை என்றெல்லாம் அரசியலில் இல்லையா? அது போன்றதுதான் இதுவும். வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் நீதியரசர்தான், கல்வி கற்றவர்தான். ஆனால் இப்போது அவர் திறமையானவராகச் செயற்படவில்லை. சிறந்த நிர்வாகியாகச் செயற்படவில்லை. அவர், அதிக அழுத்ததுக்குள், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அடிப்படைவாதத்துக்குள் அழுந்திப் போயிருக்கின்றார்.

மக்களுக்கு சேவை செய்வதற்கான அதிகாரங்கள் அவருக்கு இருக்கின்றன. ஆனால் அவற்றைப் பிரயோகித்து நிறைவேற்றும் திறமையற்றவராகவே அவர் உள்ளார்.  இத்தகைய சாரப்பட அந்தப் பேட்டியில் கருத்து வெளியிட்டிருக்கின்றார் கோத்தபாய ராஜபக்‌ச.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக