சனி, 17 மே, 2014

யாழ்ப்பாணம் திருநெல்வேலியில் விபத்து!!!! (படங்கள் இணைப்பு)

திருநெல்வேலி சந்தைக்கு அருகில் இன்று காலை இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தும் மோட்டார் சைக்கிளும் விபத்துக்குள்ளானதில் மோட்டார் சைக்கிளில் சென்ற பெண் படுகாயமடைந்துள்ளார்.

சம்பவம் தொடர்பாக ​மேலும் தெரியவருவதாவது,

பலாலி வீதியின் ஊடாக கோண்டாவில் பகுதியில் இருந்து யாழ். நகரை நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த பெண்ணை பின்னால் வந்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து முந்தி செல்ல முற்பட்ட போதே இவ் விபத்து ஏற்பட்டுள்ளது.


முந்தி செல்ல முற்பட்ட பேருந்தின் பின் பகுதியில் மோட்டார் சைக்கிள் தட்டுப்பட்டதால் மோட்டார் சைக்கிளில் சென்ற பெண் நிலைதடுமாறி விழுந்த வேளை, பேருந்தின் பின் சில்லு அந்த பெண்ணின் கால்களுக்கு மேலாக ஏறி இறங்கியதில் பெண்ணின் இரண்டு கால்களும் சிதைவுற்ற நிலையில் சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அதேவேளை இவ் விபத்து சம்பவத்தை அடுத்து கோப்பாய் பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு பேருந்தினை பொலிஸ் நிலையத்திற்கு எடுத்து செல்ல முற்பட்ட வேளை, நீதிபதி சம்பவ இடத்திற்கு வந்தால் தான் பேருந்தினை எடுத்து செல்ல அனுமதிப்போம் என கூறி படுகாயமடைந்த பெண்ணின் சகோதரன் உட்பட சில இளைஞர்கள் பொலிசாருடன் முரண்பட்டனர்.

அதனை அடுத்து அங்கு பதட்டமான சூழல் உருவானதை தொடர்ந்து சம்பவ இடத்தில் இருந்த பொலிசாரினால் மேலதிக பொலிசாரும் இராணுவத்தினரும் வரவழைக்கப்பட்டு நிலைமையை கட்டுப்பாட்டிற்கு கொண்டுவர முற்பட்டனர்.

இருந்தும் நிலைமை கட்டுக்கடங்காமல் போகவே பெண்ணின் சகோதரன் உட்பட இருவரை பொலிசார் கைது செய்ததுடன் பேருந்தினையும் பொலிஸ் நிலையத்திகு எடுத்து சென்றனர்.

இதேவேளை பேருந்தின் சாரதியையும் பொலிசார் கைது செய்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக