வெள்ளி, 30 மே, 2014

கிளிநொச்சி மத்திய கல்லூரி மைதானத்தை இனி இராணுவத்தினர் பயன்படுத்த முடியாது ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் டக்ளஸ்!!


கிளிநொச்சி மத்திய கல்லூரியின் விளையாட்டு மைதானத்தை இராணுவத் தேவைகளுக்குப் பயன்படுத்துவதற்கு இனிமேல் அனுமதிக்கக்கூடாது. அவ்வாறு அனுமதி கோரப்பட்டால் எனது கவனத்திற்குக் கொண்டு வாருங்கள். - இவ்வாறு பணித்தார் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா. கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இன்று வெள்ளிக்கிழமை வடக்கு மாகாண அமைச்சர் க.வி.விக்னேஸ்வரன், அமைச்சர் டக்ளஸ்
தேவனாந்த ஆகியோரின் இணைத் தலைமையில் கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தில் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்திலேயே அமைச்சர் மேற்படி அறிவித்தலை விடுத்தார். கடந்த ஏப்ரல் 22ஆம் திகதி நடைபெற்ற ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கண்ணிவெடி அகற்றல், மீள்குடியேற்றம், கல்வி, சுகாதாரம், உள்ளூராட்சி மன்றங்களின் செயற்பாடுகள் என 5 முக்கிய விடயங்கள் ஆராயப்பட்டன. இவை குறித்து அடுத்த ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் விரிவான அறிக்கை சமர்ப்பிக்குமாறு அமைச்சர் உத்தரவிட்டிருந்தார்.

இதன்படி கல்வி தொடர்பான அறிக்கை இன்று சமர்ப்பிக்கப்பட்டபோது, வடமாகாண சபை உறுப்பினர் சு.பசுபதிப்பிள்ளை, கிளிநொச்சி மத்திய கல்லூரியின் மைதானம் தொடர்பான கருத்துக்களை முன்வைத்தார். விளையாட்டு மைதானத்தை இராணுவத்தினர் தமது தேவைகளுக்காக பயன்படுத்தி வருவதால் மாணவர்களது கல்வி மற்றும் உடற்பயிற்சி செயற்பாடுகள் பாதிக்கப்பட்டு வருகின்றன என்று சுட்டிக்காட்டினார்.

இராணுவத்தினர் மைதானத்தை பயன்படுத்துவதானால் எவ்வாறு அனுமதி பெறுகின்றனர் என கூட்டத்தில் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு கிளிநொச்சி வலயக் கல்விப் பணிப்பாளர் க.முருகவேள், இராணுவத்தினர் கல்வித் திணைக்களத்தினூடாக அனுமதி பெறுகின்றனர் எனப் பதிலளித்தார். கருத்துப் பரிமாற்றங்களைத் தொடர்ந்து பாடசாலை விளையாட்டு மைதானத்தை இராணுவத் தேவைகளுக்காகப் பயன்படுத்துவதை இனிமேல் அனுமதிக்கமுடியாது அவ்வாறு நெருக்கடிகள் ஏற்பட்டால் என்னைத் தொடர்பு கொள்ளுங்கள் என அமைச்சர் பதிலளித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக