வியாழன், 13 மே, 2010

கேரள மாநிலத்தின் கொல்லம் நகரில் கைதான 38 இலங்கைத் தமிழர்கள் அகதி முகாமிற்கு அனுப்பிவைப்பு..!!

இந்தியாவின் கேரள மாநிலத்தின் கொல்லம் நகரில் கடந்தவாரம் கைதுசெய்யப்பட்ட 38 இலங்கைத் தமிழர்களும் தமிழ்நாட்டிலுள்ள அகதி முகாமுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருப்பதாக நேற்று புதன்கிழமை பொலிஸார் தெரிவித்துள்ளனர். பயண ஆவணங்களின்றி இருந்ததாக விடுதியொன்றில் வைத்துக் கைதான இவர்கள் மீதான விசாரணைகள் முடிவடைந்ததையடுத்தே அகதி முகாமுக்கு அவர்கள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.பொலிஸாரும் புலனாய்வுப் பிரிவினரும் கடந்த வெள்ளிக்கிழமை முதல் அவர்களை விசாரணை செய்ததாகவும் அவர்களுக்குப் பயங்கரவாதிகளுடன் தொடர்பு இருப்பதாக எதுவும் கண்டறியப்படவில்லை எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த இலங்கைத் தமிழர் குழுவைச் சேர்ந்த டெனிஸ் அல்லது குமார் என்பவர் மே 9ல் கைது செய்யப்பட்டார். உள்ளுர் பயண முகவர் நிறுவனத்துடன் இவருக்குத் தொடர்பு இருந்தமை கண்டறியப்பட்டது. அந்த நிறுவனம் ஆட்களை இடத்துக்கு இடம் கொண்டு செல்லும். அதாவது வெளிநாடுகளுக்கு சட்டவிரோதமாக ஆட்களை அனுப்பும் நிறுவனம் என்று குற்றம் சாட்டப்பட்டிருந்தது. 5 பெண்கள், சிறுவர்கள் உட்பட 38 இலங்கைத் தமிழர்களையும் அவுஸ்திரேலியாவுக்கு இந்த நிறுவனம் அனுப்பி வைக்க முன்வந்ததாகக் கூறப்படுகிறது. தமிழ்நாட்டின் இராமேஸ்வரத்திலிருந்து கடல் மார்க்கமாக இந்த இலங்கைத் தமிழர்களில் சிலர் கொல்லத்துக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். ஏனையோர் கொச்சியூடாக வந்துள்ளனர். இப்போது இராமேஸ்வரம் அகதி முகாமுக்கு அவர்கள் அனுப்பப்பட்டுள்ளனர். டெனியஸ் உட்பட 6 பேருக்கு எதிராக பொலிஸார் வழக்குப் பதிவுசெய்துள்ளனர். டெனியஸைத் தவிர மற்றைய 5 பேரும் உள்ளுர் குழுவினராகும். அவர்கள் இன்னும் கைது செய்யப்படவில்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக